விளையாட்டு

ஓரம்கட்டப்படும் பாகிஸ்தான் கோலி.. முடிவுக்கு வருகிறதா பாபர் அசாமின் கிரிக்கெட் வாழ்வு?

செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஓரம்கட்டப்படும் பாகிஸ்தான் கோலி.. முடிவுக்கு வருகிறதா பாபர் அசாமின் கிரிக்கெட் வாழ்வு?
Babar Azam’s Future in T20Is in Doubt After Asia Cup Omission
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை உட்பட மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் விளையாட உள்ளது. ஓமன், ஹாங்காங், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற கத்துக்குட்டி அணிகளும் பங்கேற்கவுள்ளன.

ரோகித், கோலி டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில் சூர்யக்குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி சந்திக்கும் மிகப்பெரிய டி20 தொடராக ஆசிய கோப்பை இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆசியக்கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறாதது கிரிக்கெட் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனி கேப்டனாக இருந்த போது இந்திய கிரிக்கெட் அணி அனைத்து ஐசிசி தொடர்களிலும் கோப்பை வென்று அசத்தியது. பாகிஸ்தான் அணியும் பாபர் அசாம் தலைமையில் அனைத்து தொடர்களிலும் கோப்பை வெல்லும் என அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கனவு கண்டனர். ஆனால், அது நடைப்பெறவில்லை.

இந்திய அணிக்கு கோலி எப்படியோ? அப்படி பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் என மார்த்தட்டிக் கொண்டிருந்த ரசிர்களுக்கு, பாபர் அசாம் ஓரங்கட்டப்படுவது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தி தான்.

ஓரம் கட்டப்படுகிறார்களா?

இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்ற தருணத்தில் ரோகித் மற்றும் கோலி ஆகியோர் தாமாக முன்வந்து தங்களது ஓய்வு முடிவினை அறிவித்தார்கள். இதன் மூலம் இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் களத்தில் தடம் பதிக்க கதவுகள் திறந்தது. இதே பாணியில் குறிப்பாக டி20 போட்டிகளில் மூத்த வீரர்களை ஓரம் கட்டிவிட்டு இளம் வீரர்களை களமிறக்கவும், வாய்ப்புகள்
வழங்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் சமீபத்தில் வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்களிலும் இடம்பெறவில்லை. தற்போது, ஆசிய கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரிலும் இடம் பெறவில்லை என்பதால் அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலும் இடம்பெற வாய்ப்பில்லை என்று தான் கருதப்படுகிறது.

பயிற்சியாளர் என்ன சொல்றாரு?

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், பாபர் அசாம் நீக்கம் குறித்து பேசுகையில், "பாபர் தனது ஸ்ட்ரைக் ரேட்டையும், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதையும் மேம்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அவர் அதற்காக மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார். ஆனால், இப்போது அணியில் உள்ள வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சாஹிப்சதா ஃபர்ஹான் ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். பாபருக்கு ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் போட்டிகளில் விளையாடி, டி20 போட்டிகளில் இந்த பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. அவரைப் போன்ற ஒரு நல்ல வீரரை அணியில் சேர்க்காமல் இருக்க முடியாது," என்று கூறினார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:

அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில், சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய சாஹிப்சதா ஃபர்ஹான், சயிம் அயூப் போன்ற இளம் வீரர்கள் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளனர். சாஹிப்சதா ஃபர்ஹான் ஆறு போட்டிகளில் மூன்று 'ஆட்ட நாயகன்' விருதுகளை வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும், அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா மற்றும் ஆல்ரவுண்டர் முகமது வாசிம் ஆகியோரும் புதிதாக இணைந்துள்ளனர்.

கேப்டனாக சல்மான் அகா:

பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடருக்கு முன் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளது. இந்தத்தொடரில் கேப்டனாக சல்மான் அகா செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கும் சல்மான் அகாவை கேப்டனாக தொடர்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அணி விவரம்:

சல்மான் அகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம், சாஹிப்சதா ஃபர்ஹான், சயிம் அயூப், சல்மான் மிர்சா, ஷாஹீன் அஃப்ரிடி, சுஃபியன் முக்கீம்.