அரசியல்

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!
பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த  நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சாதிப் பெயருடன் உள்ள நிலையில், அங்கு  ஆசிரியர் "சாதிகள் இல்லையடி பாப்பா" என பாடம் நடத்துவது பெரிய முரண் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதேபோன்ற வழக்கில் மதுரை அமர்வு, சாதி  சங்கங்கள் குறிப்பிட்ட சாதியினரின் நலனுக்கானது என்ற  சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் சங்கங்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எந்த சங்கங்களும் விதிகளை திருத்தியதாக தெரியவில்லை எனத் தெரிவித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, விதிகளை திருத்தாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மேலும், சில அரசு பள்ளிகளில் கூட சாதிப் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும்  அதிருப்தி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும் எனவும் விளக்கமளித்தார். 

அப்படி இருந்தாலும், சாதிப் பெயர் சேர்க்கப்படக் கூடாது எனக் கூறிய நீதிபதி, பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்களும் கூட சாதிப் பெயர்களை தாங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.