அரசியல்

டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கு ஏன் தடுமாற்றம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கு ஏன் தடுமாற்றம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
Edappadi Palaniswami
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சட்டம்-ஒழுங்கு, நெல் கொள்முதல், எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக அரசையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.

டிஜிபி நியமனத்தில் அரசின் அலட்சியம்

எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, "மாநில அரசு அனுப்பும் பட்டியலில் இருந்து மூவரை தேர்ந்தெடுத்து மத்திய தேர்வாணையம் மீண்டும் மாநில அரசுக்கு அனுப்பும். அதில் இருந்து ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால், பொறுப்பு டிஜிபி நியமித்த பின் ஒருவர் உயர்நீதிமன்றம் செல்கிறார். அதன் பிறகே மாநில அரசு பட்டியலை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்புகிறது. மத்திய தேர்வாணையம் அனுப்பிய பின்னும் நிரந்தர டிஜிபியை மாநில அரசு நியமிக்கவில்லை. தமிழக டிஜிபியை நியமிப்பதில் அரசுக்கு ஏன் தடுமாற்றம்? தேர்வு செய்யப்பட்டுள்ள மூவரும் இவர்களுக்கு கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் எனக் கருதிதான் டிஜிபி நியமனத்தில் அரசு காலதாமதம் செய்கிறது" என்று குற்றம்சாட்டனார்.

விவசாயிகள் துயரத்திற்கு திமுகவின் அலட்சியமே காரணம்

"திமுக அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகளுக்கு துயரம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது. கொள்முதல் செய்வதிலும் தாமதம் கொள்முதல் செய்த நெல்லை அனுப்புவதிலும் தாமதம். நெல்லை கொள்முதல் செய்யாததால்தான் மழையில் நனைந்து முளைத்து விட்டன. நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு லாரிகள் இல்லை. மதுரை சோழவந்தான் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது.

நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார். இப்போதும் நான் விவசாயிதான். மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு விரோதி. முதல்வர் விவசாயிகளை பார்க்க செல்லாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டார். நெல் கொள்முதல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசு என்ன கூறியது என்பதை தெரிவிக்க வேண்டும்" என்றார்.

வேளாண் சட்டம் மற்றும் ஈரப்பதம் கோரிக்கை

மூன்று வேளாண் சட்டம் பற்றி முதலமைச்சருக்கு எதுவும் தெரியாது. அந்தச் சட்டங்களால், தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். வட மாநிலங்களில் இருந்தவர்கள் மண்டி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குதான் அது பாதிப்பு. 22% ஈரப்பத நெல் கொள்முதல் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை. மாநில அரசு போராடி பெற வேண்டியதை எதிர்க்கட்சிதான் போராடிக் கொண்டிருக்கிறது.

காவிரி நதி நீருக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை நாங்கள் முடக்கினோம். நீட் பிரச்சனைக்காக நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறீர்களா? 39க்கும் 39 வென்றோம் என மார்தட்டிக்கொள்ளும் நீங்கள் என்றைக்காவது மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.