சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த 24-ம் தேதி சென்னை கொளத்தூரில் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது எனத் தெரிவித்தார்.
அந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில், உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே உதயநிதியின் கைவசமுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையுடன், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறையும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
அதே சமயம் அமைச்சரவையில் அதிரடி மாற்றமாக மூன்று மூத்த அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆவின் நிறுவனம் மூலம் குறைந்த கொழுப்புள்ள பாலை அதிக விலைக்கு விற்பதாகவும், பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தானும் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவிலும், துறை ரீதியிலான நடவடிக்கைகளிலும் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினரின் தலையீடு இருப்பதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனால், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஸ்தானை அப்பதவியில் இருந்து கடந்த ஜூன் மாதம் திமுக தலைமை விடுவித்தது. ஆனாலும், குற்றச்சாட்டுகள் குறையாத நிலையில், தற்போது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கா.ராமச்சந்திரனிடம் இருந்தும் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு அரசு தலைமை கொறடா பதவி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.