அரசியல்

"தேவைப்பட்டால் விஜய்யை கைது செய்யவோம்"- அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

கரூர் விவகாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


Minister Duraimurugan
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, "விஜயைக் கைது செய்யும் நிலை ஏற்பட்டால் கைது செய்வோம்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு பகுதியில் இன்று நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமைப் பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கரூர் விவகாரம்: நீதிமன்றம் குறித்துக் கருத்து

கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு கண்டனம் தெரிவித்ததைக் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "நீதிபதி சொல்வதற்கு நாம் எதுவும் சொல்லக்கூடாது. நீதிபதி சொல்வது அதற்கு எதிர்ப்பு செல்லக்கூடாது. நீதிபதிகள் எதைச் சொன்னாலும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் உண்மையைத்தான் சொல்லி உள்ளார்கள்" என்று கூறினார்.

முதலமைச்சர் விரைந்து சென்றது ஏன்?

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குச் செல்லாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கரூர் சம்பவத்துக்கு உடனடியாகச் சென்றது ஏன், உடனடியாக விசாரணை கமிஷன் அமைத்தது ஏன் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அவர், "எதிர்க்கட்சியினர் அப்படித்தான் சொல்வார்கள். அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு; இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை வேறு. 41 பேர் உயிரிழந்த சம்பவம் இது லேசான காரியமா? அனைத்து ஊடகங்களும் உலகமே இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய சம்பவம் இது. அதனால்தான் முதல்வர் உடனடியாகச் சென்றார்" என்று தெரிவித்தார்.

விஜய் கைது குறித்து விளக்கம்

த.வெ.க. தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "விஜயைக் கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம்" என்று தெளிவாகக் கூறினார்.