அரசியல்

234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi Stalin
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வேலூர் மாவட்ட இளைஞரணி சார்பில் முருகன் வேல் பரிசாக வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, துணை முதல்வனர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது தலைவருக்கு தெரியும் அவர் முடிவு எடுப்பார்” என்றார்.

மேலும், காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது குறித்த கேள்விக்கு, “காவல் துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன்” என்று பதிலளித்தார்.

முன்னதாக அறிமுக கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “வரும் சட்டமன்ற தேர்தலில் இருநூறு தொகுதிகளில் ஜெயிப்போம் என தலைவர் கூறியுள்ளார். ஆனால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் உழைக்க வேண்டும்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரை மூலம் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர் சேகரிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.