அரசியல்

கரூர் சம்பவம்: 'விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்'- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: 'விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்'- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
Nainar Nagendran and Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காதது குறித்துப் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை" என்று பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் பாதுகாப்பு குறித்து அச்சம்

நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்துப் பேசினார்.

"கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களைச் சந்திக்கவில்லை. 41 பேரை அடித்துக் கொன்றார்கள், மிதித்துக் கொன்றார்கள். தள்ளுமுள்ளுவைச் சாக்காக வைத்து விஜய்யைக் காலி செய்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், "விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அவரையும் அடித்துக் கொலை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால்தான் அவர் பாதுகாப்புக் கேட்டுள்ளார் என்று நினைக்கிறேன்" என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். இந்தக் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆளும் தி.மு.க. அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகிறது என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

தி.மு.க. தரப்பில் கண்டனம்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்துக்குத் தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதாக தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.