TVK Vijay Flag Anthem Views in 24 Hours : நடிகரும் தவெக தலைவருமான விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்கவுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய அவர், நேற்று அதன் கொடியை அறிமுகப்படுத்தினார். அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடலையும் வெளியிட்டார். இந்தப் பாடலை விஜய்யின் ஃபேவரைட் கவிஞரான விவேக் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், தமன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளதாகவும் தீபக் என்பவர் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெக பாடலின் விஷுவல் முழுவதும் கிராபிக்ஸில் உருவாகியுள்ளது.
“வெற்றிக் கழக கொடியேறுது... நம்ம சனத்தின் விதி மாறுது… வெற்றிக் கழக கொடியேறுது... மக்கள் ஆசை நிஜமாகுது” எனத் தொடங்கும் இப்பாடல் வரிகள் அனைத்தும் விஜய்க்கு ஹைப் கொடுக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட விஜய்யின் படங்களில் வரும் அவரது இன்ட்ரோ சாங் போல உள்ளது. “தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது… மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது… தமிழா தமிழா நாம வாழப் போறோமே… ஒரு கறை இல்லாத கையப் புடிச்சு போகப்போறோமே… தமிழன் கொடி தலைவன் கொடி தருமக் கொடி தரையின் கொடி வீரக் கொடி விஜயக் கொடி ஆதிக்குடிய காக்கும் கொடி தமிழன் கொடி..” போன்ற வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதேபோல், “தூரம் நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது… தோளில் வந்து கையப் போடும் தலைவன் கொடி ஏறுது… அரசர கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி… அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி” போன்ற வரிகள் செம பவர்ஃபுல்லாக அமைந்துள்ளன. முக்கியமாக “மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது” என்ற வரி, பேரறிஞர் ‘அண்ணா’ ‘எம்ஜிஆர்’ ஆகியோரது வரிசையில் விஜய் என குறிக்கும் விதமாக இடம்பெற்றுள்ளதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க - தவெக கொடிப் பாடல் வரிகள் இதோ
அதேநேரம் தவெக கொடிப் பாடலுக்கு பொதுமக்களிடம் எந்தளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது எனப் பார்த்தால், எதிர்பார்த்தளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான கோட் படத்தின் ட்ரைலர் 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. ஆனால், தவெக கொடிப் பாடலோ 24 மணி நேரத்தில் வெறும் 29 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. அதாவது இதுவரை 29 லட்சம் பேர் மட்டுமே தவெக கொடிப் பாடலை பார்த்துள்ளனர்.
இதனடிப்படையில் பார்த்தால், விஜய்யின் ரசிகர்கள் கூட இன்னும் தவெக கொடிப் பாடலை முழுதாக பார்த்திருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது கட்சித் தொடங்கியுள்ள விஜய்க்கு, எத்தனை லட்சம் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், தவெக பாடல் இன்னும் 30 லட்சம் பார்வைகளை கூட தொடமுடியாமல் திணறி வருகிறதே என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் விஜய்க்கு சினிமாவும் அரசியலும் வேறு வேறு என்பது இன்னும் புரியவில்லை எனக் கூறி வருகின்றனர். இருப்பினும் பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பையும் பார்வைகளையும் வைத்து, விஜய்க்கு மக்களிடம் எந்தளவிற்கு ஆதரவு இருக்கிறது என்பதை கணிக்க முடியாது. கண்டிப்பாக தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.