அரசியல்

TVK Maanadu: தவெக முதல் மாநாடு... அடுத்த அப்டேட் கொடுத்த விஜய்... அலப்பறையை கிளப்பிய தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்களை, அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.

TVK Maanadu: தவெக முதல் மாநாடு... அடுத்த அப்டேட் கொடுத்த விஜய்... அலப்பறையை கிளப்பிய தொண்டர்கள்!
தவெக மாநாடு - புதிய அப்டேட்டை வெளியிட்ட விஜய்

சென்னை: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், இனி முழுநேர அரசியல்வாதியாக வலம் வர முடிவு செய்துவிட்டார். அதன்படி விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டுக்காக 85 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, வாகனங்கள் நிறுத்தவும் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், தவெக மாநாட்டு மேடை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், விஜய், தவெக தொண்டர்கள் மத்தியில் நடப்பதற்காக நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தவெக மாநாடு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்களை நியமித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள். நமது கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு. மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல், சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள். அதன்படி தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்களின் பெயர்களும் அவர்களின் செல்போன் நம்பர்களையும் பகிர்ந்துள்ளனர். இதனிடையே கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்சி கேட் எதிரே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அனுமதியின்றி சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் எண் புயல் கொடியேற்றப்பட்டதால், மழை பெய்ய வாய்ப்புள்ளது இந்நிலையில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் காற்றில் அடித்து வாகனத்தில் செல்பவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் அப்பகுதி மக்கள், பொருட்கள் வாங்க கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் பேனரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னொரு பக்கம், சென்னை வில்லிவாக்கம் தமிழக வெற்றிகழக நிர்வாகிகள், வாட்டர் பாட்டில் மூலம் மாநாட்டுக்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.