அரசியல்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம்: "கடைந்தெடுத்த கபட வேலை"- இபிஎஸ் விமர்சனம்!

தி.மு.க. அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற திட்டமானது, தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் பணத்தை விரயம் செய்து நடத்தப்படும் மோசடி நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம்:
Edappadi Palaniswami and CM Stalin
தி.மு.க. அரசு சமீபத்தில் அறிவித்த 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற திட்டமானது, தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் பணத்தை விரயம் செய்து நடத்தப்படும் மோசடி நாடகம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

'கடைந்தெடுத்த கபட வேலை'

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.

நேற்றைய தினம் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50,000 தன்னார்வலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம்.

ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை. இந்த திட்டம் முதலமைச்சரின் திமுக-வின் தேர்தல் வேலையை பார்க்கும் 'PEN' நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் மீறல்

அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுக-விற்கு வேலை பார்ப்போர், வீடு வீடாகச் சென்று திமுக-விற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது. இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக 'PEN' நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம்.

மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுக-வின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மீக அடிப்படையில் மீறும் செயலாகும்.

சுய விளம்பரம் தேடும் திமுக அரசு

அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.