சென்னை: சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை உள்ளிட்ட பல்வேறு புரட்சிகரமான கருத்துகளை மக்கள் மனதில் விதைத்த ’பகுத்தறிவு பகலவன்’தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தந்தை பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ’எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''ஈராயிரம் ஆண்டு மடமைக்கு எதிரான ஈரோட்டுப் பூகம்பம் - பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த நாள் இன்று. பழமை சிந்தனைகளால் பாதுகாக்கப்பட்ட அநீதிகளையும், மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவு கொண்டு சுட்டெரித்த சுயமரியாதை சூரியன் தந்தை பெரியார் இன்றைக்கும், என்றைக்கும் நம் தமிழ்நாட்டின் அடையாளம்.
உடலால் மறைந்தாலும்; என்றும் மறையாத - எக்காலமும் பொருந்துகிற திராவிடத் தத்துவமாய் நம்மோடு வாழ்கின்ற பெரியாரின் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்னும் வேகத்தோடும் – ஆழத்தோடும் கொண்டு சேர்க்க உறுதியேற்போம். சமூகநீதி நாள் போற்றுவோம்! தந்தை பெரியார் வாழ்க!'' என்று கூறியுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ’எக்ஸ்’தளத்தில், ''ஜாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி. சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம். தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகரும், தவெக தலைவருமான விஜய், தந்தை பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்: சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியாரின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்'' என்று கூறியுள்ளார்.