சென்னை: திமுக பவளவிழாவையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 1,075 பேருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 75 வயதுக்கு மேற்பட்ட திமுக மூத்த உறுப்பினர்கள் 75 பேருக்கு தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையும், 1,000 பேருக்கு தலா ரூ.1,0000 மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘’அமைச்சர் சேகர்பாபு எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் சிறப்பாக நடத்துவார். தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் திமுகவிற்காக உழைத்த மூத்த உறுப்பினர்களுக்கு உதவித்தொகை வழங்குவதுதான் எனக்கு பிடித்த நிகழ்ச்சி. 5 முறை கலைஞர் முதலமைச்சரானதற்கு மூத்த உறுப்பினர்கள்தான் காரணம். அவர்கள் இல்லையென்றால் கட்சியில் வெற்றி சாத்தியம் இல்லை. அனைத்து சூழ்நிலையிலும் கலைஞருடன் உடன் நின்றவர்கள் அவர்கள்.
1976ம் ஆண்டு மிசா காலத்தின்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். கலைஞரை தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு நெருக்கடி அளித்தது. வெளியூரில் இருந்து கலைஞரை காண சென்னை வந்த திமுக உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்போது, திமுக மூத்த உறுப்பினர்கள் திருத்தணி, திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்வதாக கூறி விட்டு, தரிசனத்தை முடித்து விட்டு அங்கிருந்து நடந்து வந்து நேரடியாக கலைஞரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்’’என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, ‘’கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கான காரணங்கள் மூன்று. அதில் முதல் காரணம் பிரதமர் மோடி தான். அவர் தான் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வெற்றியை அளித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்றபோது மக்களிடம் இருந்த பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பு மனநிலைக்கும் பிரதமர் மோடிதான் காரணம். தமிழ்நாட்டில் புயலும், வெள்ளமும் வந்தபோது ஒருமுறை கூட எட்டிப்பார்க்காத பிரதமர், தேர்தலின்போது 8 முறை பிரசாரத்திற்காக வந்தார். பிரசாரம் முடியும் தருணத்தில் கூட விவேகானந்தர் பாறைக்கு தியானம் செய்ய வந்தார். தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு என்றைக்கும் ஆதரவு கிடைக்காது.
திமுகவின் வெற்றிக்கு இரண்டாவது காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தான். மூன்றாவது காரணம் கட்சியின் மூத்த உறுப்பினர்கள். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடந்த அனைத்து தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் பலமான கூட்டணிதான்.
’2026ம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும். இதனை திமிராக சொல்லவில்லை; திமுக உறுப்பினர்கள் உள்ள தைரியத்தில் சொல்கிறேன்’என்று ஸ்டாலின் கூறியிருந்தார். அவர் கூறியபடி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.