அரசியல்

கோவையில் எய்ம்ஸ்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வைத்த கோரிக்கை பட்டியல்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

கோவையில் எய்ம்ஸ்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வைத்த கோரிக்கை பட்டியல்
Tamil Nadu CM M.K.Stalin at NITI Aayog Meeting
நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தின் கருப்பொருளாக, 'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று சில கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்.

கூட்டம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியளித்தார். அதன் விவரம் பின்வருமாறு-

”நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன பாக்கி இருக்கிறது என்று ஒரு பட்டியிலிட்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பள்ளிக் கல்வித் துறைக்கான தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியைப் பெறுவது. அதுபோல கோவை, மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள் அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்குவது, சென்னையில் பறக்கும் இரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைப்பது என்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறோம்.”

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை:

”செங்கல்பட்டு, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை (National Highways) எட்டு வழிச்சாலையாக ஆக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறோம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மாண்பை நிலைநிறுத்தக்கூடிய வகையில் அவர்களுடைய சாதிப் பெயர்களின் விதிகளை மாற்றுவது கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிடர் மக்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்திய மீனவர்களையும் மற்றும் அவர்களுடைய படகுக்களையும் மீட்பது ஆகிய கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி அங்கு நான் பேசியிருக்கிறேன்.”

பிரதமர் மோடியுடன் நேரடியாக சந்திப்பு:

”நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தேன். ஐந்து நிமிடங்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி, இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி எடுத்துச் சொல்லியிருக்கிறேன்” என முதல்வர் பேட்டியளித்தார்.