அரசியல்

செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதி... ஓராண்டுக்குள் முடிவு... உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதி... ஓராண்டுக்குள் முடிவு... உச்சநீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி வழக்கு - சிறப்பு நீதிபதி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி கைதானார் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. அப்போது அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடந்துனர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாக இந்த வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகாரின் பேரில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து தனது ஜாமினுக்காக நீண்ட நாட்களாக போராடினார் செந்தில் பாலாஜி.  

செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துகொண்டே இருந்தன. இதனையடுத்து உச்சநீதிமன்றம் சென்ற செந்தில் பாலாஜிக்கு, கடந்த வாரம் நிபந்தனை ஜாமின் கிடைத்தது. 6 நிபந்தனைகளுடன் விதிக்கப்பட்டுள்ள இந்த ஜாமினில், அவர் மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரத்துறை அமைச்சராக நேற்று பெறுப்பேற்றுக்கொண்டார்.  

அதேபோல், உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் படி, திங்கள், வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துரை அலுவலகத்தில் கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி, இன்று அமைச்சராக நேரில் ஆஜரானார். 471 நாட்கள் சிறைவாசம் நிறைவடைந்ததை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க கோரி மனு வழங்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே அமைச்சரான பின், முதன்முறையாக இன்று அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி.