அரசியல்

ஸ்டாலின் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் – எஸ்.பி. வேலுமணி

அறிவாலய வாசலில் "கேட்-கீப்பராக" இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, முரசொலி தவிர எதையுமே படிப்பது இல்லையா? என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி

 ஸ்டாலின் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் – எஸ்.பி. வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
பதறிப் போய் இருக்கிறார்

சென்னை தி.நகரில் அதிமுக சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய இபிஎஸ் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் இபிஎஸ்சின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் திமுகவை கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் நேற்று தி.நகரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் மாடல் திமுக அரசை துறை வாரியாக தோலுரித்ததுடன், அஇஅதிமுக - பாஜக கூட்டணியைக் கண்டு இன்றைய முதல்வர் ஸ்டாலின் பதறிப் போய் இருப்பதை வெட்டவெளிச்சமாக்கியதும், எடப்பாடியார் சொன்னது சரிதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அறிவாலய வாயிற்காவலர் ஆர்.எஸ். பாரதி பேட்டியாக புலம்பித் தள்ளியிருக்கிறார்.

அறிவாலயத்தின் கேட்-கீப்பராக

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் சாதனை என்ன? அறிவாலயத்தில், மேல்மாடியில் ரெய்டு நடந்துகொண்டு இருந்த போது, கீழ்மாடியில் பயந்து, தொடைநடுங்கி, காங்கிரஸ் கால்களைப் பிடித்துக் கெஞ்சி கூட்டணி வைத்தது ஒன்று தானே? "அஇஅதிமுக - பாஜக கூட்டணி என்ன சாதித்தது?" என்று கேட்பவர்கள், கொஞ்சமாவது செய்திகளைப் படிக்க வேண்டும். எடப்பாடியார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தியதற்கிணங்க, நீண்ட நாளாக தமிழ்நாட்டிற்கு வந்து சேராமல் இருந்த 100 நாள் வேலைத் திட்டத் தொகை ரூ.2,999 கோடி மத்திய அரசிடம் இருந்து வந்திருக்கிறதே - அறிவாலய வாசலில் "கேட்-கீப்பராக" இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, முரசொலி தவிர எதையுமே படிப்பது இல்லையா?

ED, IT, CBI என மத்திய அரசின் அமைப்புகளைக் கண்டு அஞ்சிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அறிவாலயத்தில் இருக்கலாம் - புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் அப்படி யாரும் இல்லை! அதிமுக அடலேறுகள், சோதனைகள் யாவையும் சாதனைகளாக மாற்ற வல்லவர்கள்! அதற்கு முதற்சாட்சி எங்கள் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார்! ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த பொய் வழக்கை, எப்படி எடப்பாடியார் தவிடுபொடியாக்கினார் என்பது மற்றவர்களை விட, ஆர்.எஸ்.பாரதிக்கு மிக நன்றாகத் தெரியும். உடைப்பட்டது இந்த பாரதியின் மூக்கு தானே? எங்களுக்கு கூட்டணி வைக்க தனிப்பட்ட தேவை என்று என்ன இருக்கிறது?


திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி

நாங்கள் என்ன, திமுக-வா? கோமா-வில் இருந்த முரசொலி மாறனை இலாகா இல்லாமல் மந்திரியாக நிலைக்கச் செய்ய கூட்டணி சேவகம் செய்வதற்கு? தெளிவாக சொல்கிறோம் - எடப்பாடியார் எடுத்துள்ள கூட்டணி முடிவு என்பது தமிழ்நாட்டு நலனுக்கான முடிவு! தமிழ்நாட்டைக் காப்பாற்ற, தமிழ்நாட்டிற்குத் தேவையான அனைத்தும் அஇஅதிமுக-வின் முயற்சிகளால் வந்துசேரும்!

அரசியலில் தனது அத்தியாயமே முடிந்து விட்டது எனத் தெரியாமல், இன்னும் ஒரு குடும்பத்திற்கு கால் அமுக்கிக் கொண்டு, உள்ளே போடுவதை வெளியே கவ்வி கொண்டு வந்து அறிக்கையாக கக்கும் கொத்தடிமையான பாரதி, அஇஅதிமுக-வின் அரசியல் அத்தியாயம் பற்றி பேசுவது வேடிக்கையின் உச்சம்! 2026 சட்டமன்றத் தேர்தலில் குடும்ப ஆதிக்கம் செலுத்தும் வாரிசு மன்னராட்சி நடத்தும் திமுக-வின் அரசியல் அத்தியாயத்தை தமிழக மக்கள் ஒழித்துக் கட்டி, திமுக-வின் வெற்று விளம்பர ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு முடிவுகட்டி வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம்” என பதிவிட்டுள்ளார்.