அரசியல்

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: உரிய இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: உரிய இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்
EPS urges appropriate compensation
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில், இன்று காலை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செம்மங்குப்பம் பகுதியில் ரயில் தண்டவாளம் சாலையின் நடுவே அமைந்துள்ளது. வழக்கம் போல் வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், இன்று காலை பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிச் சென்றுள்ளது. இந்த நிலையில், ரயில் வருவதை கவனிக்காமல் ஓட்டுநர் வேனை இயக்கியதால், கடலூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கி பல அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் 2 மாணவர்கள் பலியானதாகவும், சில மாணவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே கேட் கீப்பரின் கவனக்குறைவு விபத்துக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.