Pinarayi Vijayan Respond to Amit Shah : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் விடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள் என அனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன.
மண்ணில் புதையுண்டும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 180க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், வயநாடு நிலச்சரிவு அங்கு பேசும்பொருளாகியுள்ளது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் வயநாடு மக்களின் குரலை நாடாளுமன்ற மக்களவையில் எதிரொலித்தார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள அரசு மீது குற்றம்சாட்டினார். அதாவது ''கேரளாவில் அதீத கனமழை பெய்யும் என்று மத்திய அரசு சார்பில் ஜூலை 22ம் தேதி, 1 வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதை கவனிக்காமல் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது?
மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மழை, வெள்ளம், வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகள் குறித்தும் இயற்கை பேரிடர் முன்எச்சரிக்கை அமைப்பு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் மாநில அரசுகள்தான் அதை கண்டுகொள்வதில்லை'' என்று அமித்ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ''இது பழிவாங்கி விளையாடுவதற்கான நேரம் இல்லை'' என்று அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய பினராயி விஜயன், ''வயநாட்டில் நடந்த பேரழிவு காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் இதுபோன்ற மிக அதிகமான கனமழை பெய்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவகாலநிலை மாற்றம் தொடர்பாக நாம் பல்வேறு நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் (மத்திய அரசு) மற்றவர்கள் மீது பழியை போட்டு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இது மற்றவர்கள் மீது குற்றம்சாட்டி விளையாடுவதற்கான நேரம் இல்லை'' என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து வயநாடு நிலச்சரிவு குறித்து பேசிய பினராயி விஜயன், ''வயநாடு நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சேதமடைந்த பாலங்கள், மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டு சாலைகளில் சரிந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. 5,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். குடும்பத்தை இழந்தோருக்கு அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும்'' என்று கூறியுள்ளார்.