அரசியல்

மாடுகள் மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான் தங்கியிருக்கும் இடத்தை சுற்றி போலீசார் குவிப்பு!

'மாடுகள் மேய்க்கும் போராட்டத்திற்கு' வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாடுகள் மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான் தங்கியிருக்கும் இடத்தை சுற்றி போலீசார் குவிப்பு!
Police deployed around Seeman's residence
நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி மலைப்பகுதியில் இன்று (நவம்பர் 22) அறிவிக்கப்பட்டிருந்த 'மாடுகள் மேய்க்கும் போராட்டத்திற்கு' வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள்னர். இதனால் நெல்லை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்திற்கான பின்னணி

நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில், மரங்கள், நீர்நிலைகள் மற்றும் ஆடு, மாடுகளுக்காக மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். நேற்று (நவம்பர் 21) நெல்லை மாவட்டம் கூந்தன்குழியில் நடந்த 'கடலம்மா மாநாட்டில்' நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, கடலில் கழிவுகள் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காணொளி காட்சியை ஒளிபரப்ப விட்டு மக்களுக்கு விளக்கம் அளித்தபடி பேசினார். தொடர்ந்து இன்று 2வது நாளாக நெல்லையில் முகாமிட்டுள்ள சீமான், பணகுடி மகேந்திரகிரி மலைப்பகுதியில் "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன் வைத்து இன்று மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

அனுமதி மறுப்பும் காவல்துறை நடவடிக்கையும்

இதற்காக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையில், போராட்டம் அறிவிக்கப்பட்ட இடம் வனத்துறையின் பூதப்பாண்டி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சீமானின் போராட்டத்துக்கு வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. எனவே, அனுமதியில்லாத காரணத்தால் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பணகுடியில் நாம் தமிழர் நிர்வாகிகள் ஜேசுதாசன், பால்சாமி, ராஜீவ்காந்தி, பொன்ராம், மாடசாமி உள்ளிட்ட 6 பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியே செல்ல விடாமல் போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

சீமான் தங்கியுள்ள பகுதியில் பரபரப்பு

சீமான் நேற்று இரவு மாநாட்டை முடித்துக்கொண்டு நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள தனது கட்சி நிர்வாகி ஒருவரின் மண்டபத்தில் தங்கியிருக்கிறார். அவரும் வெளியே செல்லாத வகையில் போலீசார் அவர் தங்கியிருக்கும் மண்டபத்தைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பணகுடி மலையடிவார பகுதியில் பேரிகார்டுகள் வைத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினரும் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெல்லையில் பரபரப்பு நிலவுகிறது.