அரசியல்

தாயுமானவர் ஸ்டாலின்... அன்பை பெற இயலுமோ? அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்!

Minister Senthil Balaji X Post on CM Stalin : உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

தாயுமானவர் ஸ்டாலின்... அன்பை பெற இயலுமோ? அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்!
அன்பை பெற இயலுமோ? அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்!

Minister Senthil Balaji X Post on CM Stalin : பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை கடந்து இந்த ஆண்டு பவள விழாவை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற திமுக பவள விழா காஞ்சிபுரத்தில் கடந்த செப். 28ம் தேதி நடைபெற்றது. அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் என ஆளுநர் மாளிகை அறிவித்தது. இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த 26ஆம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் தற்போது மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவருக்கு மீண்டும் மின்சாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது X தளத்தில், “செந்தில்பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது' என இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி. 

பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ? உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்.!” என தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: உதயநிதிக்கு வாழ்த்துகள்..... எனக்கு அரசியலுக்கு வர...... விஜய் ஆண்டனி!

இவருடன் சேர்ந்து புதிதாகப் பொருப்பேற்றுள்ள கோவி. செழியனுக்கு உயர்கல்வித் துறை, நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் மாளிகையில் நேற்று (செப். 29) செய்து வைத்தார்.