அரசியல்

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்
MLA jagan moorthy walks out
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் காளியம்மன்பட்டி பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி துணி- நூல் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நடைபெறும் கொண்டசமுத்திரம் ஊராட்சி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி எனவும், மேலும் கைத்தறி பூங்கா திறப்பு கல்வெட்டில் தொகுதி எம்எல்ஏவான புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி அவர்களின் பெயர் பதிவு செய்யவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே கைத்தறிவு பூங்கா திறப்பு நிகழ்ச்சியை புறக்கணித்து ஜெகன் மூர்த்தி சென்று விட்டார்.

ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள்:

அதிமுக மற்றும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ-வின் பெயரை அவரது சொந்த தொகுதியில் நடைப்பெறும் நிகழ்விலேயே பெயர் போடாமல் புறக்கணிப்பதா? என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உடனடியாக கல்வெட்டில் தற்காலிகமாக கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் பெயர் ஸ்டிக்கரால் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி நிகழ்ச்சியினை புறக்கணித்து சென்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ”அதிமுக கட்சியை எதிர்கட்சியாக பார்க்கக் கூடாது. அனைத்து அரசு விழாக்களிலும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தற்போதைய அரசு புறக்கணித்து வருகிறது. இன்றைய நிகழ்வில் கல்வெட்டில் தனது பெயரையும், நிகழ்ச்சி நடைபெறும் கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பெயரையும் இடம் பெற செய்யாமல் இந்த அரசு அராஜகம் காட்டி வருகிறது” என சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி குற்றம் சாட்டினர்.

2 கோடி மதிப்பில் கைத்தறி பூங்கா:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கைத்தறி பூங்கா அமைப்பதற்காக கடந்த ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டி பகுதியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கைத்தறி பூங்காவை நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். திறப்பு விழாவினை தொடர்ந்து 113 நெசவாளர்களுக்கு ரூபாய் 2 கோடியே 76 இலட்சத்து 42 ஆயிரத்து 165 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் காந்தி மற்றும் துரைமுருகன் ஆகியோர் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.