அரசியல்

திமுக ஆட்சியில் அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு – நயினார் நாகேந்திரன்

குளித்தலை அருகே 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு – நயினார் நாகேந்திரன்
முதலமைச்சர் முகஸ்டாலின் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
அச்சத்தை ஏற்படுத்துகிறது

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மது போதையில் அட்டகாசம் செய்தவர்களைத் தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் செல்வன். ஷியாம் சுந்தர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

போதையில் பொதுமக்களை அச்சுறுத்துபவர்களைக் கேள்வி கேட்பவர்கள் மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்துமளவிற்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் அதிகரித்து வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று வாய்ச்சவடால் விடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான், தினந்தினம் போதைப் பழக்கத்தால் விளையும் வன்முறைக் குற்றங்களும் அதனால் சீரழியும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

பொறுப்பற்ற திமுக ஆட்சி

திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு செல்லும் என்ற தமிழக மக்களின் பொது நம்பிக்கைக்கு இம்மாதிரியான சம்பவங்கள் மறுக்க முடியாத ரத்த சாட்சிகளாக நிற்கிறது. தமிழகத்தில் இதுபோன்று உச்சத்தைத் தொட்டுள்ள கொலை, கொள்ளை, போதைக் கலாச்சாரத்தைக் கண்டும் காணாமல் கடந்து, மக்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை உருமாற்றி வரும் இந்த பொறுப்பற்ற திமுக ஆட்சியானது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

ஏனென்றால், 2026-ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் தீர்ப்பிற்கு பிறகு, இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை” என பதிவிட்டுள்ளார்.