அரசியல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: "சி.பி.ஐ. விசாரணைக்குத் தயக்கம் ஏன்?"- குஷ்பு கேள்வி!

கரூர் விவகாரத்தில் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்:
Kushboo questions
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று நடிகையும் பா.ஜ.க. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க. மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் 'தாமரை தேசமே' என்ற பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

விஜய் குறித்த கேள்விக்கு குஷ்பு பதில்

கரூர் விபத்து தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த குஷ்பு, "நான் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அல்ல. அந்தக் கேள்வியை விஜயிடம் கேட்டு பதில் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வேண்டும் என விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து, "அப்படி எந்த அழைப்பும் பா.ஜ.க. சார்பில் விடுக்கப்படவில்லை. அது முற்றிலும் பொய்யான தகவல்" என்று அவர் மறுத்தார்.

மணிப்பூர் Vs கரூர் ஒப்பீடு தவறு

மணிப்பூர் சம்பவத்துக்கும் கரூர் விபத்துக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் வகையில் கேள்வி எழுந்தபோது, "மணிப்பூர் சம்பவத்தையும் கரூர் சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பேசுவது முற்றிலும் தவறு. மணிப்பூரில் நடந்தது எல்லைப் பிரதேசத்தில் நடந்த துயரமான நிகழ்வு. அங்கு நடந்ததை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால் கரூரில் நடந்தது தமிழக அரசின் பொறுப்பிலேயே நடந்தது" என்று அவர் விளக்கினார்.

சி.பி.ஐ. விசாரணைக்குத் தயக்கம் ஏன்?

கரூர் சம்பவம் தொடர்பாகத் த.வெ.க.வினரே சி.பி.ஐ. விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநில அரசின் நிலைப்பாடு குறித்துக் குஷ்பு கேள்வி எழுப்பினார்.

"மாநில அரசு ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்புதல் தராமல், மாநிலக் காவல்துறையின் மூலமாகவே விசாரணை நடத்துகிறது? இது மக்களின் மனதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் விதமாக உள்ளது" என்று அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கேள்வி எழுப்பினார்.