அரசியல்

யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ’ஆன்டி நக்சலைட்’ தான்- MP கனிமொழி பேச்சு!

மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களை "ஆன்டி நக்சலைட்டுகள்" என்று பாஜக அரசு அச்சுறுத்துவதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ’ஆன்டி நக்சலைட்’ தான்- MP கனிமொழி பேச்சு!
Kanimozhi Accuses BJP Government of Labeling Proponents of State Rights as Anti Naxalites
ஆயர்களின் கூட்டுத் தலைமை மற்றும் தமிழ்நாடு ஸ்டேன்சாமி மக்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டம், விரகாலூரில் புதியதாக நிறுவப்பட்டுள்ள ஸ்டேன்சாமி திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் எம்.பி-களான கனிமொழி, திருமாவளவன் உட்பட கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த மண்ணின் சேகுவாரா ஸ்டேன்சாமி:

நிகழ்வில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், "திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, 200-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் நடந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. போராளி என்றால் நினைவுக்கு வருபவர் சேகுவாரா தான். தன் மக்களுக்காக அவர் போராடினார். அதேபோன்று நம் மண்ணில் இருப்பவர்தான் ஸ்டேன் சுவாமி. மக்களோடு நின்று போராடியவர் பிறந்த மண் இந்த விரகாலூர்.

யார் கேள்வி கேட்டாலும், நீங்களும் ஆன்டி நக்சலைட் தான் என்கிறார்கள். 84 வயதான, டீ கூட குடிக்க சிரமப்பட்ட ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டார். அவருக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை. மத ரீதியான அரசியல், ஜாதி ரீதியான அரசியல் செய்கின்றனர். பொதுமக்களுக்கான திட்டங்களுக்கு மாநில மொழியில் பெயரிடுவதில்லை. ஆங்கிலத்தில் கூட பெயர் வைப்பதில்லை, திட்டங்களின் பெயரைப் புரிந்துகொள்ளவே முடியாது.

மாநில உரிமைகளைப் பறிக்கக்கூடிய ஆட்சி தான் ஒன்றியத்தில் நடைப்பெற்று வருகிறது. சாதாரண மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடியது பாஜகவின் ஆட்சி. நமது உரிமை, உடை, வாழ்விடம், உணவு ஆகியவற்றை அவர்களே முடிவு செய்யும் நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். நாம் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இது தேர்தலுக்கான விடுதலைப் போராட்டம் இல்லை. நம்முடைய எதிர்கால தலைமுறைக்காகவும், அவர்களின் சுயமரியாதைக்காகவும் தான். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை முதல்வரின் கவனத்திற்கும், நாடாளுமன்றத்தின் அவைக்கு எடுத்துச் செல்வேன். எல்லாருக்குமான ஆட்சி என்பதை தமிழக முதல்வர் கூறி வருகிறார். அதுதான் நமக்கு இலக்கும் கூட" என்று கனிமொழி பேசினார்.

நக்சல் அமைப்பினர் நமது தோழர்கள்:

இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ”கேட்பாராற்ற மக்களுக்காக உழைத்தவர் ஸ்டேன்சாமி. ஜார்கண்ட் பழங்குடியின மக்களுக்காகப் போராடியவர், அம்மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அவர்களுக்கு மனித உரிமைகள் உள்ளன, சட்டம் உள்ளது என்று எடுத்துரைத்தவர் ஸ்டேன் சுவாமி. இது எப்படி சட்ட விரோதமாகும்” என்றார்.

மேலும் பேசுகையில் "அமித் ஷா அடிக்கடி சொல்கிறார் நக்சல்களை ஒழிப்போம் என்று. நமது பார்வையில் அவர்கள் தோழர்கள். மக்களுக்காக ஆயுதங்களை எடுத்துப் போராடுகிறார்கள். காடுகளை அழித்து, வனவிலங்குகளை அழித்து கார்ப்ரேட்டுகளுக்குக் கொடுக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. நக்சல் அமைப்பினர் எங்கள் தோழர்கள். அவர்கள் தேர்தலை விரும்பாதவர்கள், ஆயுதம் ஏந்தினால்தான் புரட்சி என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் நாம் வேறுபடுகிறோம். நாம் நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறையை ஏற்கிறோம். அவர்களோடு தொடர்பு வைத்திருந்தால் என்ன தவறு? கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டத்தில் நிற்பவர்கள்" என்றார்.

இந்த மாநாட்டில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், காங்கிரஸ் கட்சி மாநிலச் செய்தித் தொடர்பாளர் வேலுச்சாமி, காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் கலை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.