அரசியல்

"பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" நயினார் நாகேந்திரன் கேள்வி!

"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Nainar Nagendran
"கடந்த ஐந்து நாட்களில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது தமிழகத்திற்குத் தலைகுனிவு இல்லையா?" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "கடந்த ஐந்து நாட்களில் வெளியே தெரிய வந்த வன்கொடுமைகள் 17 எனில், வெளியே சொல்லப் பயந்து மறைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு?" என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

மேலும், இந்த 17 குற்றங்களில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், "கடந்த நான்காண்டுகளில் எத்தனை குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது?" என கேள்வி எழுப்பினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்

"தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று போலியாகச் சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, நம் வீட்டுப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஆட்சி முடியும் தருவாயிலாவது விளம்பரங்களை விடுத்து வெளியுலகம் வந்து, நிர்வாகத் திறனின்மையால் அவதியுறும் பொதுமக்களின் அழுகைக் குரலைக் கேட்டுப் பாருங்கள்" என்றும் அவர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.