அரசியல்

ஹைட்ரோ கார்பன் கிணறுகள்.. போராட்டங்கள் முன்னெடுப்போம்- சீமான்

ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் கிணறுகள்.. போராட்டங்கள் முன்னெடுப்போம்- சீமான்
Seeman
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மன்னார் வளைகுடாவிற்கு ஆபத்து

சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், “ராமநாதபுரத்தில் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மத்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் (ONGC) முன்மொழிந்தது. இந்தத் திட்டத்திற்கு மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, தமிழக மக்களின் எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரலையும் முற்றிலும் புறக்கணிப்பதாகும்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்தத் திட்டம் மன்னார் வளைகுடாவிற்கு ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இந்தியாவில் உள்ள ஒரே கடல்சார் உயிர்க்கோளக் காப்பகமான மன்னார் வளைகுடாவில், பவளப் பாறைகள், அரிய வகை மீன்கள் மற்றும் பல்வேறு கடல் உயிரினங்கள் உள்ளன. இந்தத் திட்டம், அவற்றைச் சீர்குலைத்து, கடற்கரையோர வாழ்விடங்களை அழிக்கும் அபாயம் உள்ளது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திமுக அரசுக்குக் கண்டனம்

மேலும், “2019-ல் எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டசபையில் இந்தத் திட்டத்தை எதிர்த்த திமுக, 2023-ல் ஆளும் கட்சியாக இத்திட்டத்திற்கு அனுமதி தர மாட்டோம் என உறுதியளித்தது. ஆனால், இப்போது அனுமதி வழங்கியுள்ளது. மேலும், மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியும் கண்டனத்திற்குரியது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘போராட்டங்களை முன்னெடுப்போம்’

“இனியும் மக்களை வெற்றுச் சொற்களால் ஏமாற்றாமல், அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற திமுக அரசு முன்வர வேண்டும். இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்ட முன்மொழிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கோரிக்கைகளை ஏற்கத் தவறினால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.