நாமக்கல் மாவட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “3-வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். நாடு சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் நேரு தொடர்ந்து பிரதமராக இருந்தார். அதிக ஊடகங்கள் இல்லாததால், நேரு கூறுவதை மட்டுமே நம்ப வேண்டியதாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி பிரதமர் பணியாற்றி வருகிறார். 100-வது சுதந்திரத்தை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருப்பதை அனைவரும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே இணைப்பு, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் வந்தே பாரத் ரயில் நின்று செல்கிறது. அந்த அளவிற்கு ரயில்வேயில் நெட்வொர்க் பரந்து விரிந்து உள்ளது.
சேலத்தில் இருந்து விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் ஏழை எளிய மக்களின் நலனை கருதி விவசாயிகளுக்கு 6000 ரூபாய், அனைவருக்கும் பிரதமர் வீடு திட்டம், வீடுகள் தோறும் கழிப்பறை திட்டம், இலவச எரிவாயு திட்டம், இலவச அரிசி பருப்பு உணவு பாதுகாப்பு திட்டம் என்பன உள்ளிட்ட ஏழை எளிய மக்களின் வளர்ச்சி அனைத்து தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைத்து 3-வது முறையாக மக்கள் பேராதரோடு இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற 2047-ல் 100-வது சுதந்திர தின நாளில் வல்லரசு நாடாக இருக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சி அடைந்த குடிமகனாக இருக்க வேண்டும். அப்துல் கலாம் கண்ட கனவு வளர்ச்சி அடைந்த பாரதத்தை வழங்குவது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியாகும். பாஜகவால் மட்டுமே வளர்ச்சி அடைந்த பாரதத்தை வழங்க முடியும்.
ஆனால் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2004 முதல் 2014 வரை நாட்டின் வளர்ச்சிக்கு அக்கறை காட்ட வில்லை. ஊழல், கொள்ளை சம்பவங்கள் அதிகம் இருந்தன. இன்று இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கண்டு வளர்ச்சியை நோக்கி பிரதமர் நமது நாட்டை வழிநடத்தி செல்கிறார். நாடு, கட்சி, குடும்பம் என்ற குறிக்கோளோடு தான் பாஜக செயல்படுகிறது. ஆனால் திமுக குடும்ப நலனை மட்டுமே அக்கறை செலுத்துகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலட்சியத்தோடு செயல்படுகிறோம். ராமர் கோயில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்து ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து, நாட்டுக்கு அளித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். அதற்கான பணியை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு கொடுத்த கொள்கை ரீதியாக வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில், 2026-ம் ஆண்டு தேர்தலில், மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை போல, மிகப்பெரிய உத்வேகத்தோடு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள வேண்டும். செங்கோட்டையை பிடித்ததுபோல தமிழகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நாம் பிடிக்க வேண்டும். அதே இலக்கோடு/ எண்ணத்தோடு நாம் தொடர்ந்து கட்சிப் பணியாற்ற வேண்டும்” என்றார்.