அரசியல்

30 முதல் 70 வரை... மிசா சிவா திருச்சி சிவா ஆனது இப்படித்தான்.. முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்ற விவாதங்களில் ஆளும் தரப்பில் சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

30 முதல் 70 வரை... மிசா சிவா திருச்சி சிவா ஆனது இப்படித்தான்.. முதல்வர் ஸ்டாலின்!
மிசா சிவா திருச்சி சிவா ஆனது இப்படித்தான்.. முதல்வர் ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் திருச்சி சிவா எம் பி எழுதிய முரசொலியின் மடியில் தவழ்ந்தவை”, “மேடையெனும் வசீகரம்”, “கேளுங்கள் சொல்கிறேன்”, “எதிர்பாராத திருப்பம்”, “காட்சியும் கருத்தும்” ஆகிய நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (அக். 5) வெளியிட்டார. விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுகவின் இளைஞர் அணியை உருவாக்கியபோது ஐந்து பேரை அமைப்பாளர்களாக கருணாநிதி உருவாக்கினார். நான் முதலாவது இரண்டாவது திருச்சி சிவா. மிசா என் சிவா என்கின்ற பெயரை திருச்சி சிவா என்று மாற்றியவர் கருணாநிதி. அப்போது நாங்கள் எல்லாம் 30 களைத் தொட்ட இளைஞர்களாக இருந்தோம். தற்போது 70 தொட்டும் தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறோம். எங்களை என்றும் இளமையாக இயக்குவது கழகம், கருப்பு சிவப்பு கொடி, தலைவர் கருணாநிதி இல்லையென்றால் நாங்கள் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது. 

கருணாநிதி இன்று இருந்திருந்தால் ஐந்து புத்தகங்களையும் உச்சி முகர்ந்து சிவாவை பாராட்டிருப்பார். எதிர்பாராத திருப்பம் சிவாவின் சிறையை சொல்கிறது. மேடை என்னும் வசீகரம் சிவாவின் மேடையை காட்டுகிறது. கேளுங்கள் சொல்லுகிறேன் அவரின் பாதங்களாக இருக்கிறது. காட்சியும் கருத்தும் கலை இலக்கியங்களாக இருக்கிறது. அந்த வகையில் சிவாவின் ஐந்து முகங்களை வெளியிடும் மேடை இந்த மேடை. அரசியலுக்கு வெளியில் இருக்கக்கூடியவர்கள் படிக்கும் புத்தகமாக இருக்கிறது. இளைஞர் அணியை தொடங்கிய காலத்தில் ஐவரில் ஒருவராக இருந்தார். அதன் பிறகு பத்தாண்டு காலம் இளைஞர் அணியின் துணைச் செயலாளர், 15 ஆண்டு காலம் மாநில மாணவரணி செயலாளர், இப்போ கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர். 

திமுகவின் முகமாக திருச்சி சிவா மாநிலங்களவை குழு தலைவராக  செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் 526 விவாதங்களில் பங்கேற்று 790 கேள்விகளை எழுப்பி உள்ளார். அதனால்தான் ஆளும் தரப்பில் சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்ற அச்சம் உள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மாபெரும் சாதனை ஏன் இன்றைக்கு யுபிஎஸ்சி தேர்வுகளில் இது ஒரு கேள்வியாக கேட்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஒரு வழிகாட்டியாக சிவா இருக்கிறார். சிறையில் இருந்து மாநிலக் கல்லூரிக்கு நான் தேர்வு எழுதியது போல் திருச்சி சிவாவும் திருச்சி பெரியார் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்போடு தேர்வு எழுதி இருக்கிறார். சிறைச்சாலை என்கின்ற பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நாங்கள் என்பதால்தான் யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மிசா காலத்தில் மாநில கட்சிகள் தடை செய்யப்படுவதாக செய்திகள் வந்தது. அப்போது அதிமுகவின் பெயரை அனைத்திந்திய அதிமுக என்று மாற்றினார்கள். ஆனால் நம் கட்சி பெயர்  கலைஞர் இருக்கும் வரை மாறவே மாறாது. இரண்டு வாரத்துக்கு முன்பு தான் பவள விழா கொண்டாடினோம். 75 வருடங்களாக நம் இயக்கத்தின் பெயர் மாறவில்லை. கொடி மாறவில்லை, சின்னம் மாறவில்லை. எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம், நாம் மாறவில்லை! நம் போராட களம் மாறவில்லை! இனி இவர்தான் நம் தளபதி என்று என்னை அழைத்தவர் சிவா. 

அந்த காலத்தில் நாங்கள் திமுகவில் அடியெடுத்து வைத்த போது எதிரிகள் பொய்களையும் வதந்திகளையும்தான் பரப்பி இருந்தார்கள். ஆனால் இன்று பாஜகவினர் பொய்களையும் வதந்திகளையும் மட்டும் பரப்பாமல் எப்படி எல்லாம் வரலாறுகளை மாற்றலாம் என்று நினைக்கிறார்கள். அவற்றை உடைத்து இருக்கின்றார் திருச்சி சிவா. இந்த நூல்கள் மாதிரி பல நூல்கள் தேவை. சிவா ஐஏஎஸ் ஆக முடியவில்லை என்று தனது பேட்டியில் கூறியிருக்கிறார். ஐஏஎஸ் பதவிக்கு ஓய்வு உண்டு. ஆனால் திமுகவுக்கும் நம் பயணத்துக்கும் என்றும் ஓய்வில்லை” எனத் தெரிவித்தார்.