அரசியல்

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!
former minister sellur raju publicly apologized
காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா சார்பில் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. போர் பதற்றம் அதிகரித்த சூழ்நிலையில், இரு நாடுகளிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிகழ்வுகளை நிறுத்த முடிவெடுத்ததால் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது.

இந்நிலையில் தான், ”ஒவ்வொரு இந்தியர்களும் பாரத பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இதை விட்டுட்டு ராணுவ வீரர்களா எல்லையில் போய் சண்டையா போட்டாங்க. இன்னைக்கு இருக்கிற தொழில் நுட்பத்திற்கு ஏற்ற கருவிகளை வாங்கிக்கொடுத்தது மத்திய அரசு தான்” என ஆபரேஷன் சிந்தூர் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுகவினை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையானது.

செல்லூர் ராஜூ ஒரு கோமாளி:

ராணுவ வீரர்களை பற்றி அவதூறாக பேசியதாக கொதித்தெழுந்த முன்னாள், இந்நாள் இராணுவ வீரர்கள் பலரும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மீது வழக்கு தொடரவும் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். சமீபத்தில் உதகைக்கு விசிட் அடித்திருந்த, முதல்வர் ஸ்டாலினிடம் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, “அவர் ஒரு கோமாளி..அவர் பேசியதை எல்லாம் பெரிதுப்படுத்த விரும்பவில்லை” என நோஸ் கட் செய்திருந்தார்.



தொடர்ந்து எதிர்ப்புக்குரல் எழுந்து வந்த நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தின் வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ. இதுத்தொடர்பான பதிவில், “இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன். அவர்களின் தியாகத்தை வணங்குபவன் . என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் ”தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம், அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள். நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.

ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்குமேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.