அதன்படி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்ரவி, “உலகம் முழுவதும் வசித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி குறிக்கிறது. அன்னை லட்சுமி நம் இதயங்களை அளவற்ற அன்பு மற்றும் ஆழ்ந்த இரக்கத்தால் ஒளிரச் செய்து, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு, சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்த்து அருள்புரிவாராக. உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “இந்திய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய “தீபாவளி“ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையைப் பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம்.
இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்குக் கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுளை வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.
தீப ஒளியின் மகிழ்ச்சி மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைப்பதை உறுதி செய்வது தான் அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். ஆட்சியாளர்களால் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை என்றால், அதை சாத்தியமாக்கும் திறன் யாருக்கு இருக்கிறதோ, அவர்களை ஆட்சியாளர்களாக்க வேண்டும். அதன்மூலம் மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “இந்தியா முழுமையும் மகிழ்ந்து கொண்டாடும் ஒருநாள் தீபாவளி. இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி என இந்த ஒளிநாளில் அனைவர் மனதிலும் உற்சாகம் நிறைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.