சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து முடிந்த 76-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பு பேரணியில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, செய்யாறில் இருக்கக்கூடிய தேசிய மாணவர் படை முகாமை ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தேசிய மாணவர் பணியில் இருந்து தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 14 லட்சம் ரூபாயிலிருந்து 28 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மாணவர்களை இந்த முறை விமானத்தில் அழைத்துச் செல்ல கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு சார்பாக 28 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து மாணவர்களும் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டார்கள் என்று கூறினார். மேலும், பதக்கங்களை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தானும் டான் போஸ்கோ பள்ளியில் பயிலும் போது என்சிசி பிரிவில் சேர முயற்சித்தேன் எனவும் ஆனால் தன்னால் தேர்வாக முடியவில்லை எனவும் அதன்பிறகு என்.எஸ்.எஸ் பிரிவில் சேர்ந்ததாக தெரிவித்தார். இப்போது உங்கள் முன் என்.சி.சி.நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய படை வீரர்கள் கலந்து கொள்ள கடந்த காலங்களில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது மூன்று நாட்கள் ஆகிவிடுகிறது எனவும் அதனால் மிக சோர்வாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முறை 28 லட்சம் ரூபாய் செலவில் விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர் என தெரிவித்தார்.
மேலும் சென்னையில் பெரியார் சிலை அவமதிப்பு குறித்தான கேள்விக்கு, சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீமான் பற்றி பேச நான் விரும்பவில்லை என்று கூறினார்.