இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை கடந்து பவள விழாவை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற திமுக பவள விழா, நேற்று (செப். 28) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதேநேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் என்ற அறிவிப்பும் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இதனையடுத்து இன்று (செப். 29) துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் நித்தி அகர்வால் உள்ளிட்ட நடிகைகளும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை சின்ன சொக்குளம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மாலில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹிட்லர் பட குழுவினர் ரசிகர்களுடன் திரைப்படத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து, ரசிகர்களுடன் விஜய் ஆண்டனி மற்றும் பட குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, “ஹிட்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, நல்ல கதை அம்சம் மிக்க திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது கட்சிக்கு பாடல் இசை அமைக்க தயாராக உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள். அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் அனைவரிடமும் இயல்பாக பழகும் குணம் கொண்டவர். திரைப்படத்துறையில் இருந்து கலைஞர், எம்ஜிஆர் உள்ளிட்டோர் அரசியலில் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் விஜயும் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” என்று கூறினார்.