அரசியல்

சாதிவாரி கணக்கெடுப்பு...தேர்தலுக்கான அறிவிப்பு இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

வருடத்திற்கு ஒரு தேர்தல் வரும், அதனை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட விசயம் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு...தேர்தலுக்கான அறிவிப்பு இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்

சாதிவாரி கணக்கெடுப்பு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக மோடி அரசு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் முயற்சி எடுத்தார்கள்.அது அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்பட்ட காரணத்தால் நிறைவு பெற்றதாக கருத முடியாத நிலைமை ஏற்பட்டது.

நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் விகிதாச்சார அடிப்படையில் நன்மைகள் செய்ய வேண்டும் என்று சாதிவாரி கணக்கெடுப்பு என்னும் நல்ல முடிவை மோடி அரசு எடுத்துள்ளார்கள். பிரிட்டிஷ் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.ஆனால் அவர்களால் முழுமையாக எடுக்க முடியவில்லை.சுதந்திர பாரத்ததில் 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துள்ளது. தற்போது 8வது முறை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இப்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் முழு முயற்சியில் எடுக்க உள்ளார்கள்.

மக்களை உதாசினப்படுத்தும் காங்கிரஸ்

கடந்த காலங்களில் மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லாமல் இருந்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்பு சாதி வாரி கணக்கெடுப்பை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னால் பாரதிய ஜனதா கட்சியோ அல்லது ஜன சங்கமோ இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த சமுதாய மக்களை உதாசினபடுத்தும் விதமாக காங்கிரஸ் அரசு இருந்துள்ளது.

மோடி அரசாங்கம் எந்த மக்களையும் உதாசினப்படுத்துவதாக இல்லை. இது பிரதமர் மோடியின் ஆளுமை தன்மை. பிரதமர் மோடி கடந்த 2ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டு மக்களுக்கு அர்பணித்துள்ளார். இது மிகவும் சந்தோசத்திற்கு உரிய விசயம்.பல ஆண்டுகளாக கேரளாவில் கிடப்பில் போடப்பட்டு வந்த திட்டத்தை பிரதமர் மோடி அரசு நிறைவேற்றி உள்ளது. குளச்சல் துறைமுகம் கொண்டு வருவது குறித்து திட்டமிடப்பட்டபோது, விழிஞ்சம் துறைமுகத்தால் பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்கள்.

தேர்தலுக்காக அறிவிப்பு கிடையாது

ஆனால் சில மதவாதிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் குளச்சல் துறைமுகத்தை எதிர்த்த காரணத்தால் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு பிரதமர் தந்த அமிர்த கலசத்தை இழந்து நிற்கிறார்கள்.

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பல கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். வருடத்திற்கு ஒரு தேர்தல் வரும், அதனை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட விசயம் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை.இது தேர்தலுக்காக கொண்டுவரப்பட்ட அறிவிப்பு கிடையாது. குளச்சல் துறைமுகம் குறித்து பேசும் அருகதையில் இல்லை. எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்புகள் தெரிவிப்பவர்களுக்கு, கடல் நாட்டிற்கு சொந்தமானது, அதனை எனக்குத்தான் சொந்தம் என்று யாரும் கூற முடியாது” என தெரிவித்தார்.