அரசியல்

கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும்- ராமதாஸ் பதில்!

"2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும்- ராமதாஸ் பதில்!
Ramadoss
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மகூட்டம் இன்று (நவம்பர் 25) நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டணி குறித்த அறிவிப்பு

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அவர் பேசுகையில், 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் (டிசம்பர்) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்தக் கூட்டணி முடிவு, அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள பா.ம.க. கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி டிசம்பர் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோர்

தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.