அரசியல்

4 ஆண்டுகளில் திமுக..”சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..” தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டங்கள்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக மாறியுள்ளது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். அப்படி திமுக ஆண்ட கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

நலத்திட்டங்களுக்கு பெயர் போன கட்சி திமுக. கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம், தமிழ்நாட்டில் அதிரடியாகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாகவும் ஒளித்தன. 10 ஆண்டுகள் கழித்து, மீண்டும் 2021ல் திமுக அரசு ஆட்சி அமைத்த போது, முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினிடமும் பல எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்டன. இவர் கலைஞரை போல செயல்படுவாரா என மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த 4 ஆண்டுகளில் திமுக கொண்டுவந்த திட்டங்கள்.

2021ல் ஆட்சி அமைத்த திமுக அரசு, தமிழகத்தில் மக்கள் நலனையும் சமூக நீதியையும் மையமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, விவசாய மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் முற்றிலும் தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. நவீன நிர்வாக முறைகள், திறந்த அரசியல் பண்பு, மற்றும் மக்களோடு நேரடி தொடர்பு ஆகியவை, இந்த ஆட்சியின் தனிச்சிறப்புகளாக பேசப்படுகிறது.

2021ல் ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனக் கூறி பதவியேற்ற மு.க.ஸ்டாலின், பதவியேற்ற கையோடு, கோட்டைக்கு சென்று நாற்காலியில் அமர்ந்தவுடன், விடியல் பயண திட்டம், கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்பு ஆகிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டு ஆட்சியை தொடங்கினார். 2021ம் ஆண்டில் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 நிவாரண நிதி 2 தவணைகளாக வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 99% ரேஷன் அட்டைதாரர்கள் இந்த தொகையையும், நிவாரண மளிகை பொருட்களையும் பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.


மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்

பெண் வளர்ச்சியை மையமாக வைத்து இயங்கி வரும் திமுக, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த அறிவிப்பால் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கமுடிகிறது. இந்த இலவச பஸ் பயணம் திட்டம் தமிழ்நாட்டை இந்த நாடிற்கே முன்னோடியாக திரும்பிப் பார்க்கவைத்தது. இந்த திட்டத்தால் பயன் பெறும் பெண்கள், மாதந்தோறும் தங்கள் வருமானத்தில் 800 ரூபாய் வரை பிடித்தம் செய்ய முடிவதாகவும், இந்த சேமிப்பை கல்வி, சுகாதாரம் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுவதும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:

ஏழை, எளிய, சாமானிய மக்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கான தனித்துவமான திட்டங்களை தீட்டுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அந்தவகையில் தான், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், குடும்பத் தலைவிகள் தங்களின் தனிப்பட்ட செலவிற்காக கணவரையோ அல்லது பிள்ளைகளையோ எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இன்னுயிர் காப்போம் திட்டம்:

கடந்த 2021ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் அதிக விபத்துகள் நடக்கும் 500 இடங்களை கண்டறிந்து அதன் அருகில் உள்ள மருத்துவானைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்து நேர்ந்து முதல் 48 மணி நேரத்தில், மருத்துவமனையில் சேர்ப்போருக்கு 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதோடு விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கை வகையில் 2 லட்சம் ரூயார் காப்பீட்ய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்:

’தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு?’ என்ற கேள்வியை ’சேவல் கொடி’ பாடலின் மூலம் பாடலாசிரியர் பா.விஜய் வைத்த கேள்வியை, உண்மையிலேயே நிகழ்த்திக்காட்டியது திமுக ஆட்சி. இத்திட்டம் மூலமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் வழக்கம் கொண்டுவரப்பட்டது.


புதுமைப் பெண் திட்டம்:

2022ம் ஆண்டில் அதிமுக கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டதே இந்த புதுமைப்பெண் திட்டம். பெண் வளர்ச்சிக்கு கல்வி மிகவும் அவசியம் என கருதிய திமுக, அரசு பள்ளிகளில் படித்து முடித்த மாணவிகள் உயர்கல்வியில் சேரும் விகிதத்தை உயர்த்தவேண்டும் என கருதியது. இதனால் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்:

அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என நினைத்த திமுக, இந்தியாவிலேயே முதன்முறையாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மாத ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது.

இல்லம் தேடி கல்வி திட்டம்:

கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளிகள் தொடங்கப்பட்ட பிறகு 2022ம் ஆண்டில் ’இல்லம் தேடி கல்வி திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களின் இல்லம் இருக்கும் பகுதிகளுக்கே சென்று அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில், 1.7 லட்சம் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.


நான் முதல்வன் திட்டம்:

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் அனைத்திலும் வல்லவர்களாக உருவாகும் விதமாக அவர்களது திறன்மேம்பாட்டிற்காக 2022ம் ஆண்டில் தொடங்கப்பட்டதே நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, மொழிகளில் தேர்ச்சி, எந்த படிப்பை தேர்வு செய்வது என்பது குறித்தான வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்தல் என பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 23 லட்ச மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டம்:

ஆரோக்கியமான குழந்தைதான் நாளைய தமிழ்நாட்டின் தூண்கள் என உணர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022ம் ஆண்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டுவந்தார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்களில் முத்தாய்ப்பான திட்டமாக பார்க்கப்படுவது முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்றால் அது மிகையல்ல. கிராமங்கள் மற்றும் நகரங்களில் பெற்றோர்கள் அதிகாலையில் வேலைக்குச் செல்வதாலும், குழந்தைகளும் அதிகாலையில் அவசரமாக பள்ளிக்கு புறப்படும் போதும், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவை தவிர்க்கின்றனர். இதனால் சோர்வு ஏற்பட்டு கற்றல் திறன் குறைவதோடு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக முதலில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை தொடக்க கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார் மு.க.ஸ்டாலின்.

இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த சிற்றுண்டி வழங்குவதால் ஒரு குழந்தைக்கு 293.40 கி.கலோரி ஆற்றல், புரதம் 9.85 கிராம், கொழுப்பு 5.91 கிராம், இரும்பு சத்து 20.41 மி.கிராம் மற்றும் சுண்ணாம்பு சத்து 1.64 மி.கிராம் கூடுதலாக கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

தமிழ்ப் புதல்வன் திட்டம்:

2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தின் நீட்சியாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டம் தான் தமிழ்ப் புதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை மாணவர்கள் தங்களின் கல்விச் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பதோடு, இடைநிற்றலை முழுவதும் குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை:

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்பதைத் தாண்டி, இவ்வுலகிற்கு நாம் என்ன திருப்பி செலுத்தினோம் என்ற கேள்விக்கான விடையாக இருப்பது உடல் உறுப்பு தானம். நம் இறப்பிற்கு பின் செய்யப்படும் உடல் உறுப்பு தானத்தின் மூலம் என்னற்றோர் வாழ்க்கை பெற்றுள்ளனர். இத்தகைய அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. இந்த நிலையில், தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

தோழி விடுதி திட்டம்:

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைகாக வரும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக 'தோழி விடுதி திட்டம்’ திமுக அரசால் 2024ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தோழி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விடுதி, பெண்களுக்காக பாதுகாப்பான, மலிவு விலையில் கிடைக்கும் விடுதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை , செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படி கல்வி, தொழில், பெண் வளர்ச்சி, ஆண்மிகம், மக்கள் பிரச்சனை சார்த்த திட்டங்களை அறிவித்துள்ள திமுகவின் இந்த 4 ஆண்டு கால ஆட்சிக்கு, இந்த முத்தான திட்டங்களே சாட்சி என்று சொன்னால் மிகையாகாது...