இந்தியா

கைப்புள்ள தூங்கு.. நகைகளை திருடிவிட்டு கோயிலுக்குள் தூங்கிய திருடன்

ஜார்கண்டில் உள்ள ஒரு காளி கோயில் நகைகளை திருடிய இளைஞன், அங்கே அசந்து தூங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

கைப்புள்ள தூங்கு.. நகைகளை திருடிவிட்டு கோயிலுக்குள் தூங்கிய திருடன்
Thief who stole jewelry and slept inside the temple
ஜார்கண்டின் நோவாமுண்டியில் வீர் நாயக் என்ற இளைஞர், திருடும் நோக்கத்துடன் கோவிலுக்குள் நுழைந்துள்ளார். ஆனால், உச்சகட்ட போதை காரணமாக அங்கேயே தூங்கிவிட்டதால் வசமாக சிக்கிக்கொண்டார். கோவில் பொருட்களுடன் தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரை உள்ளூர் மக்களும் பூசாரிகளும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட வீர் நாயக், கடந்த 14 ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் அதிக மது அருந்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, காளி கோயில் சுவரை ஏறி குதித்து, கதவின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்துள்ளார்.

அலங்காரப் பொருட்கள், மணி, பூஜை தட்டு மற்றும் நகைகள் என தன்னால் முடிந்த அனைத்தையும் திருடியுள்ளார். திருடிய பொருட்களால் நிரப்பப்பட்ட பைகளுடன் கோவிலில் இருந்து தப்பிக்க முற்றிலும் தயாராக இருந்துள்ளார். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு தூக்கம் வரத் தொடங்கி, போதையில் அங்கேயே தூங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, அடுத்த நாள் காலை கோயில் உள்ளே ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை உள்ளூர் மக்கள் கண்டுபிடித்தனர். சந்தேகத்தின் பேரில், அவர்கள் அவனது பையை திறந்து பார்த்தபோது, அது கோயிலில் இருந்த பொருட்களால் நிறைந்திருப்பதைக் கண்டனர். உடனடியாக அவர்கள்போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த திருடனை கைது செய்த போலீசார், அவனிடம் விசாரணை நடத்தினர். இதில், குற்றம் சாட்டப்பட்ட வீர் நாயக் கோயிலில் திருட முயன்றதை ஒப்புக்கொண்டார். ஆனால், தான் எப்போது தூங்கிவிட்டேன் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், திருடன் வீர் நாயக் திருடிய பொருட்களுடன் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.