இந்தியா

சிறுமி பாலியல் வன்கொடுமை.. தப்பியோடிய இளைஞனை சுட்டுப்பிடித்த போலீசார்!

உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை.. தப்பியோடிய இளைஞனை சுட்டுப்பிடித்த போலீசார்!
Police shoot and arrest the young man who sexually assaulted a minor girl
உத்தரப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டம் கலின்ஜார் பகுதியில், ஆறு வயது சிறுமி ஒருவரை அவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 20 வயது இளைஞரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் பலாஷ் பன்சால் தெரிவிக்கையில், “நேற்று (ஜூலை 25) மாலை 5 மணியளவில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞனை தீவிரமாகத் தேடினர். இளைஞன் கலின்ஜாரில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த இளைஞன் தான் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு போலீசார் மீது சுட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார், பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இளைஞனின் இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது” என்று அவர் கூறினார்.

காயமடைந்த அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக இளைஞனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.