இந்தியா

'பப்ஜி' விளையாட்டுக்கு ‘நோ’ சொன்ன பெற்றோர்.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான மகனிடம் பெற்றோர் செல்போனைபறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பப்ஜி' விளையாட்டுக்கு ‘நோ’ சொன்ன பெற்றோர்.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு!
Student commits suicide after being told to stop playing PUBG
ஆன்லைன் விளையாட்டான ‘பப்ஜி’க்கு அடிமையானதால், செல்போனைப் பறித்த பெற்றோர் மீது கோபம் கொண்ட 10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷேந்திரா என்ற அந்த மாணவன், தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக ‘பப்ஜி’ விளையாட்டில் மூழ்கி இருந்துள்ளான். விளையாடுவதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை என்று கூறி, பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்தியுள்ளான்.

இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர், அவனை ஒரு மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை அளித்த மருத்துவரையே அவன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பெற்றோர் அவனிடமிருந்து செல்போனைப் பறித்துள்ளனர். இதனால் பப்ஜி விளையாட முடியாமல் போனதால், மன அழுத்தத்துக்கு உள்ளன அந்த மாணவன் மூன்று நாட்களுக்குப் பிறகு தற்கொலை செய்து செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லக்னோவில் ஒரு சம்பவம்

இதேபோல, இந்த மாத தொடக்கத்தில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 14 வயது சிறுவன் ஒருவன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்டான். இரவு நேரத்திலும் அவன் விளையாடுவதைப் பார்த்த அவனது தாய், படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறியிருக்கிறார். அதன் பிறகு அந்தச் சிறுவன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

‘பப்ஜி’ போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது, மன அழுத்தம், தனிமை மற்றும் குடும்பப் பிரச்சனைகள் போன்ற பல காரணங்களால் உலகம் முழுவதும் பல இளம் வயதினரை தற்கொலைக்குத் தூண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).