இந்தியா

புறாக்களால் வந்த பிரச்னை.. அரசு போட்ட அதிரடி உத்தரவு..!

புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புறாக்களால் வந்த பிரச்னை.. அரசு போட்ட அதிரடி உத்தரவு..!
Kabootar khanas closed
மகாராஷ்டிரா அரசு, மும்பையில் உள்ள அனைத்து 51 'கபூதர் கானா'க்களையும் (புறாக்களுக்கு உணவு அளிக்கும் இடங்கள்) உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது. புறாக் கழிவுகள் மற்றும் இறகுகளால் ஏற்படும் பொது சுகாதார அபாயங்களைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புறாக்களுக்குத் தொடர்ந்து உணவளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் விவாதம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி அன்று, சிவசேனா (UBT) சட்டமன்ற உறுப்பினர் மனிஷா காயண்டே இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார். மும்பையில் உள்ள கபூதர் கானாக்கள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் என்றும், நடைபாதைகள் புறாக் கூடுகளாக மாறிவிட்டன என்றும் அவர் விவரித்தார். மேலும், புறாக் கழிவுகள் கடுமையான நுரையீரல் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

மனிஷா காயண்டேயின் கருத்தை ஆதரித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா வாக் உணர்வுபூர்வமான வேண்டுகோளை விடுத்தார். தனது அத்தை நீண்டகாலமாக புறாக் கழிவுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததால் ஏற்பட்ட சுவாச நோயால் இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் உதய் சாமந்த், "மும்பையில் 51 'கபூதர் கானாக்கள்' உள்ளன. ஒரு மாதத்திற்குள் 'கபூதர் கானா'க்களுக்கு எதிராக (விழிப்புணர்வு) பிரச்சாரத்தைத் தொடங்கவும் 'கபூதர் கானாக்களை' மூடும் பணியை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

புறாக்கள் ஏன் ஆபத்தானவை?

புறாக்கள் நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டாலும், அவைகளின் கழிவுகள், இறகுகள் பல்வேறு சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்திக்கின்றன. புறாக்களின் எச்சத்தில் உள்ள பூஞ்சைகள் மனிதர்களில் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த பாதிப்பு சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

புறாக்கள் வீடுகளில் கூடுகட்டும் இருக்க பால்கனிகளை வலைகளை கொண்டு மூடலாம். அதேபோல், பழைய சிடிக்கள் அல்லது சுழலும் கண்ணாடிகள் போன்ற பிரதிபலிப்பு பொருட்களை புறா நுழையும் இடங்களில் வைப்பது அவற்றை விரட்ட உதவும். மேலும், புறா கழிவுகளை சுத்தம் செய்யும்போது, கையுறைகள், முகக்கவசம் போன்றவற்றை அணிந்துகொள்வது நல்லது.