சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல்(ITR Filing Last Date) செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாள். இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பலரும் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் ஆடிட்டர் அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. அதன்படி இன்னும் ஓரிரு வாரங்கள் வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என்பதாக சொல்லப்பட்டது.
இதன் காரணமாக வருமான வரி தாக்கல் செய்பவர்களிடையே குழப்பமான சூழல் காணப்பட்டது. இதுபற்றி முறையான அறிவிப்பு ஏதும் வெளியாகுமா என எதிர்பார்த்திருந்தனர். அதேநேரம் ஐடி ஃபைலிங் செய்ய பலரும் முயன்று வருவதால், வருமான வரி இணையதளம் அடிக்கடி முடங்கியது. இதற்காக தான் தேதி நீட்டிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது. இதனையடுத்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். அதாவது சமூக வலைத்தளங்களில் ஐடி ஃபைலிங் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க - கூகுள் மேப்பின் புதிய அப்டேட் என்னன்னு தெரியுமா..?
ஐடி ஃபைலிங் செய்வது பற்றியோ அல்லது தேதி நீட்டிக்கப்படுவது குறித்தோ, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் தான் அறிவிக்கப்படும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வாட்ஸப் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். அதன்படி வரும் ஜூலை 31ம் தேதி ஐடி ஃபைலிங் செய்ய கடைசி நாள் என்றும், அதற்குள் வருமான வரி தாக்கல் செய்துவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல், ஐடி ஃபைலிங் செய்து ரிட்டர்ன் தொகையை பெற்றுத் தருவதாக நடைபெறும் மோசடிகள் பற்றியும் அதிகாரிகள் வார்னிங் செய்துள்ளனர். சரியான அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் மட்டுமே வருமான வரி கணக்கதை தக்கல் செய்வது நல்லது என்றும், செல்போன்களில் வரும் மோசடியான மெசேஜ்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். வருமான வரி தாக்கல் செய்வது குறித்து வெளியான தகவல்கள் வதந்தி என்றும், தேதி நீட்டிக்கப்படுவதாக அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை என்பதையும் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.