இந்தியா

இனி நோ பேக் பெஞ்சர்ஸ்.. U-வடிவ இருக்கைக்கு மாறும் கேரள பள்ளிகள்!

மலையாள படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது கேரளாவிலுள்ள சில பள்ளிகள்.

இனி நோ பேக் பெஞ்சர்ஸ்.. U-வடிவ இருக்கைக்கு மாறும் கேரள பள்ளிகள்!
Kerala Schools Adopt U-Shaped Seating and Eliminating Backbencher Stereotype
இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் கேரளா. மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள்.

அரைவட்ட U-வடிவில் இருக்கைகள்:

பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் முதல் பெஞ்சில் அமருபவர்கள் நன்றாக படிப்பவர்கள், கடைசி பெஞ்சில் அமருபவர்கள் கல்வியில் பின் தங்கியவர்கள் என்கிற பிம்பம் பல ஆண்டுக்காலமாக உள்ளது. இந்த பிம்பத்தினை உடைத்துள்ளது கேரளாவில் உள்ள சில பள்ளிகள்.

இப்போது செய்துள்ள மாற்றம் என்னவென்றால், வரிசையாக பெஞ்ச் போடுவதற்கு பதிலாக, U-வடிவில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவொரு மாணவர்களும் தான் முதல் வரிசை, கடைசி வரிசை என இனி சொல்ல முடியாது. கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு மறைமுகமாக கூட இனி எதிர்மறையான எண்ணங்கள் உருவாகாது என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுகிறது. ஆசிரியரும் இனி அனைத்து மாணவர்களையும் நேருக்கு நேர் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள படத்தின் தாக்கம்:

இருக்கைகள் அமைப்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டினை பெற்றுள்ள நிலையில், மலையாள பட இயக்குநரை பலர் தங்கள் கமெண்டில் டேக் செய்து வருகின்றனர்.

அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், ”ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்” (Sthanarthi Sreekuttan) என்கிற மலையாள திரைப்படம் கடந்த நவம்பர் 22, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது பள்ளி மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளானது, பள்ளி வகுப்பறைகளில் U-வடிவில் இருக்கைகள் போடப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும்.



இப்படத்தின் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத், இருக்கை அமைப்பு மாற்றப்பட்டுள்ள சில பள்ளிகளின் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, சில பள்ளிகள் எங்கள் படத்தின் வாயிலாக இதுப்போல் மாற்றம் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கொல்லம் பகுதியில் அமைந்துள்ள ஆர்விவி மேல்நிலைப்பள்ளி, கன்னூர் பகுதியில் பாப்பினிசேரி வெஸ்ட் பள்ளி, பாலக்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி போன்றவற்றில் முதற்கட்டமாக இந்த மாணவர்கள் இருக்கை வசதியானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் இந்த U-வடிவ பெஞ்ச் அமைப்பு பாராட்டினை பெற்றுள்ள நிலையில், அனைத்து கல்வி நிலையங்களிலும் இதனை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.