இந்தியா

போக்குவரத்துக்கு விதிமீறல்.. அபராதம் செலுத்திய கர்நாடக முதல்வர்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.

போக்குவரத்துக்கு விதிமீறல்.. அபராதம் செலுத்திய கர்நாடக முதல்வர்!
Karnataka Chief Minister pays fine
கர்நாடகாவில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி திட்டம் அமலில் உள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் அதிகாரபூர்வ வாகனத்தின் ஏழு விதிமீறல்களுக்கான அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, கர்நாடக மாநிலத் பாஜக தலைவர் விஜயேந்திராவின் காரின் 10 போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களும் செலுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் சித்தராமையாவின் வாகன விதிமீறல்கள்

நகரின் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் (ITMS) கண்காணிப்பு கேமராக்கள், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பல விதிமீறல்களில் ஈடுபட்டதைக் கண்டறிந்ததாகப் போக்குவரத்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விதிமீறல்களில், ஆறு முறை சீட்பெல்ட் அணியாதது மற்றும் ஒரு முறை அதிக வேகத்தில் சென்றது ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஜனவரி முதல் ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டத்தில் பதிவாகியுள்ளன. சீட்பெல்ட் விதிமீறல்களின்போது முதலமைச்சர் சித்தராமையா காரின் முன் இருக்கையில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

மாநில அரசின் 50 சதவீத போக்குவரத்து அபராதத் தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி, முதலமைச்சரின் அலுவலகம் மொத்தம் ரூ.2,500-ஐ அபராதமாக செலுத்தியுள்ளது. இந்தத் தள்ளுபடித் திட்டம் கர்நாடகா முழுவதும் நிலுவையில் உள்ள அனைத்துப் போக்குவரத்து விதிமீறல்களுக்கும் பொருந்தும். இந்த வழக்குகள் எந்தவித சிறப்பு சலுகையும் இல்லாமல், வழக்கமான நடைமுறைகளின்படி கையாளப்பட்டதாக பெங்களூரு போக்குவரத்துப் காவல்துறை தெரிவித்துள்ளது.

விஜயேந்திராவின் அபராத நிலுவை

அதேபோல், பாஜக தலைவர் விஜயேந்திராவின் காரின் விதிமீறல்களில் சீட்பெல்ட் அணியாதது, அதிக வேகம், சிக்னல் ஜம்ப் உள்ளிட்டவை அடங்கும். 2020 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த இந்த 10 விதிமீறல்களுக்கு அவரது அலுவலகம் மொத்தம் ரூ.3,250 அபராதமாகச் செலுத்தியுள்ளதாகப் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபராதம் வசூல் நிலவரம்

காவல்துறை கூற்றுப்படி, இந்தத் தள்ளுபடி சலுகை ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12 வரை செல்லுபடியாகும். 2019 முதல் 2025 வரை நகரத்தில் சுமார் 3 கோடி போக்குவரத்து விதிமீறல்கள் நிலுவையில் உள்ளன, இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,000 கோடி ஆகும். நேற்றைய (செப்.6) நிலவரப்படி, 16,21,721 வழக்குகள் தீர்க்கப்பட்டு, மொத்தம் ரூ.45,52,750 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.