கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்ற ஒரே ஒரு நபர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. மேலும் மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மேற்கு வங்க அரசு நிறைவேற்றியுள்ளது. மருத்துவ மாணவி படுகொலை நடந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும், மற்ற குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்பு சிபிஐ வசம் விசாரணை வந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சஞ்சய் ராயின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு பமீலா குப்தா விசாரித்தார். அப்போது சஞ்சய் ராயின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தாமதமாக வருவார் என மாஜிஸ்திரேட்டுவிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த அவர் 'நான் சஞ்சய் ராய்க்கு ஜாமீன் வழங்க வேண்டுமா? இது சிபிஐயின் மந்தமான அணுகுமுறை. சிபிஐ இப்படி நடந்து கொள்வது துரதிருஷ்டம்'' என்று தெரிவித்தார். இதன்பிறகு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் 40 நிமிடங்கள் தாமதமாக நீதிமன்றத்துக்கு வந்தார்.
அப்போது தாமத்திற்கான காரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு அவரிடம் கேட்டார். இதன்பின்பு தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில், சஞ்சய் ராய்க்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், மருத்துவ மாணவி படுகொலை வழக்கில் சிபிஐ அலட்சியமாக செயல்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், ''ஒரு முக்கியமான வழக்கில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தாமதமாக வருகிறார். நீதிமன்றம் கடும் கோபம் அடைகிறது. என்ன நடந்தது? என சிபிஐயிடம் கேட்க விரும்புகிறோம். இந்த விஷயத்தில் பாஜக மவுனமாக இருப்பது ஏன்? சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து 24 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்று நாட்டு மக்கள் கேட்கின்றனர். சிபிஐ நடந்து கொள்வதை பார்த்தால் இந்த வழக்கில் சீரியஸாக செயல்படவில்லை என்பது தெரிகிறது'' என்றார்.