இந்தியா

புதிய 20 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பத்தைத் தவிர, தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 20 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
Issue of new 20 rupees Denomination Bank notes
இந்திய ரிசர்வ் வங்கி 20 ரூபாய் தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய மகாத்மா காந்தி (புதிய) சீரிஸ் ரூ.20 மதிப்புள்ள நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வரவிருக்கும் புதிய ₹20 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பிறஅம்சங்கள் தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கும். வண்ணங்கள், பரிமாணங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் சித்தரிப்பு அனைத்தும் புதிய ரூபாய் நோட்டிலும் அப்படியே இடம்பெறும்.

பழைய 20 ரூபாய் நோட்டுகள் செல்லுமா?

சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 2024 முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதியதாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 20 ரூபாய் நோட்டில் ரிசர்வங்கியின் ஆளுநர் கையொப்பம் மட்டுமே மாறும். இதனால், தற்போது புழக்கத்திலுள்ள 20 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகுமா? என்கிற அச்சம் பொதுமக்களுக்கு வேண்டாம் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. புழக்கத்தில் இருக்கும் 20 ரூபாய் நோட்டுகள் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image

ரூபாய் நோட்டுகளில் ஏன் இந்த திடீர் நடவடிக்கை என எழுந்த கேள்விக்கு, ”தற்போதைய ஆளுநரின் கையொப்பத்துடன் புதிய நோட்டுகளை வெளியிடுவது என்பது, காலம் காலமாக தொடர்ந்து வரும் ஒரு நிலையான நடைமுறை” என்று ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. இந்த நடவடிக்கையானது, புழக்கத்தில் உள்ள தற்போதைய நாணயத்தின் செல்லுபடியையோ அல்லது பயன்பாட்டையோ பாதிக்காது என்பதையும் ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

சஞ்சய் மல்ஹோத்ராவின் பின்னணி என்ன?

சஞ்சய் மல்ஹோத்ரா இந்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக 2024 டிசம்பர் 11 முதல் செயல்பட்டு வருகிறார். கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) கணினி அறிவியலில் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா. 1990 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். இந்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் துறையின் செயலாளராக பணிபுரிந்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவில் 2022 பிப்ரவரி 16 முதல் 2022 நவம்பர் 14 வரை அரசு நியமன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் நிதி சேவைகள் துறையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு பணத்தாள்களும், புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படாத வரை, இந்தியாவில் எந்த இடத்திலும் செல்லுபடியாகும். மேலும் அவற்றிற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். இது 1934 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் துணைப்பிரிவு (2) பிரிவு 26 இன் விதிகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.