புல்லட் ரயில் திட்டத்தின் சோதனை ஓட்டங்கள் வருகிற 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும், 2029-ஆம் ஆண்டுக்குள் முழு சேவையும் தொடங்கப்படும் என்றும் குஜராத் மாநில அரசின் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்வி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பயண நேரத்தை 2 மணி நேரமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிறைவுற்ற கட்டுமானப்பணிகள் விவரம்:
508 கிலோமீட்டர் நீளமுள்ள மும்பை-அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் (MAHSR-Mumbai-Ahmedabad High-Speed Rail project) வழித்தடத்தில் சூரத் முக்கிய ரயில் நிறுத்த நிலைய மையமாக செயல்பட உள்ளது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL- National High Speed Rail Corporation Limited) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த திட்டத்தின் கீழ் 300 கிலோமீட்டர் மேம்பாலங்கள் (viaducts) கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில், சூரத் அருகே 40 மீட்டர் நீளமுள்ள கிரிடர் (girder) சமீபத்தில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
India’s first bullet train station in Surat is almost ready. Trial runs will begin next year, and full service is expected by 2029.
— Harsh Sanghavi (@sanghaviharsh) May 24, 2025
Also, 300 km of viaduct work near Surat is now complete with the launch of a 40-meter full-span box girder. pic.twitter.com/SF2xd3O6EX
கட்டப்பட்ட மேம்பாலங்களில், 257.4 கிலோமீட்டர் தூரம் 'ஃபுல் ஸ்பான் லாஞ்சிங் முறை' (Full Span Launching Method - FSLM) மூலமாகவும், 37.8 கிலோமீட்டர் 'ஸ்பான் பை ஸ்பான்' (Span by Span - SBS) முறையிலும் கட்டப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் 14 ஆற்றுப் பாலங்கள், 0.9 கிலோமீட்டர் நீளமுள்ள எஃகு பாலங்கள் (steel bridges) மற்றும் 1.2 கிலோமீட்டர் நீளமுள்ள ப்ரீ-ஸ்ட்ரெஸ்ட் கான்கிரீட் பிரிவுகளும் (pre-stressed concrete segments) அமைக்கப்பட்டுள்ளன.
மொத்த திட்டத்தில் 383 கிலோமீட்டர் தூரத்திற்கு தூண் அமைக்கும் பணிகளும் (pier construction), 401 கிலோமீட்டர் தூரத்திற்கு அடித்தளப் பணிகளும் (foundation works), 326 கிலோமீட்டர் தூரத்திற்கு கிரிடர் வார்ப்புகளும் (girder casting) நிறைவடைந்துள்ளதாக NHSRCL தெரிவித்துள்ளது. ரயில் இயங்கும் போது ஏற்படும் சத்தத்தைக் குறைக்கும் வகையில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான அதிர்வொலி தடுப்பு தடைகள் (noise barriers) மேம்பாலங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
புல்லட் ரயில் திட்டத்திற்கான செலவினம்:
சுமார் ₹1.08 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மாபெரும் திட்டமானது மத்திய அரசு (₹10,000 கோடி), குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் (தலா ₹5,000 கோடி), மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) கடன் உதவியுடன் (மீதமுள்ள தொகை) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சூரத் புல்லட ரயில் நிலையம், 'இந்தியாவின் வைர நகரம்' என்ற அதன் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வைர வடிவ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உயர்தர கழிப்பறைகள், குழந்தைகளுக்கான பார்க் வசதி மற்றும் உடைமைகளை வைப்பதற்காக லாக்கர்கள், முதல் வகுப்பு பயணிகளுக்கு பிசினஸ் லவுஞ்ச், சக்கர நாற்காலி அணுகல், பிரெய்லி வழிமுறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறைகள் போன்ற அம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.