இந்தியா

நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு.. பாஜக ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு

நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அவர் பாஜகவுடன் தொடர்புடைய நபர் என கண்டறியப்பட்டுள்ளது.அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு.. பாஜக ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு
FIR filed against manohar lal dhakad
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் கணவர், டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஒரு வெள்ளை நிற காருக்கு வெளியே ஒரு ஆணும், பெண்ணும் அநாகரீகமான முறையில் உடலுறவில் ஈடுபடுவதாக வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ மே 13 அன்று எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவுச்சாலையில் பொதுமக்கள் பார்வையில் அப்பட்டமாக நடந்த இந்தச் செயல் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. வீடியோவில் காணப்படும் வெள்ளை கார், போக்குவரத்துத் துறையின் வாகன எண் பதிவுகளின்படி, மனோகர்லால் தாக்கட் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில் காணப்பட்ட ஆண், மாண்ட்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்லால் தாக்கட் என அடையாளம் காணப்பட்டார். இவரது மனைவி சோஹன் பாய், மாண்ட்சூர் மாவட்ட பஞ்சாயத்தின் 8-வது வார்டு உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) ஆதரவு பெற்றவராகவும் உள்ளார். மனோகர்லால் தாக்கட் உஜ்ஜயினில் பதிவு செய்யப்பட்ட தாக்கட் மகாசபையின் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார்.

ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மாண்ட்சூர் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மனோகர்லால் தாக்கட் மற்றும் அவருடன் இருந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் அநாகரீகமான செயல், பொது வழியில் இடையூறு போன்ற செயல்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாண்ட்சூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு, மனோகர்லால் தாக்கட் தலைமறைவாகி விட்டதாகவும், அவரது போன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மனோகர்லால் தாக்கட் பாஜக உறுப்பினர் என்று தகவல்கள் பரவியதால் அரசியல் வட்டாரத்திலும் இது புயலை கிளப்பியது. ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக உடனே மறுப்பு தெரிவித்தது.

மாண்ட்சூர் மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் தீட்சித் கூறுகையில், மனோகர்லால் தாக்கட் கட்சியின் முதன்மை உறுப்பினர் இல்லை என்றும், அவர் ஆன்லைனில் உறுப்பினராகியிருக்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அவரது மனைவி பாஜக ஆதரவுடம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபடுவோர் கட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜேஷ் தீட்சித் இவ்வாறு கூறினாலும், பாஜகவின் முன்னணி தலைவர்களுடன் மனோகர்லால் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மனோகர்லால் தாக்கட் வகித்து வந்த தாக்கட் மகாசபையின் தேசிய செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பும் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் ரத்லம் ரேஞ்ச் டிஐஜி மனோஜ் சிங் கூறுகையில், ”ஒரு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், சமூக நெறிமுறைகளையும் மீறிய ஒரு செயல். இத்தகைய செயல்கள் பொது இடங்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.