இந்தியா

பக்கத்து வீட்டாருடன் சண்டை.. ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் இளைஞர்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு இளைஞர் ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வருகிறார்.

பக்கத்து வீட்டாருடன் சண்டை.. ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் இளைஞர்
Youth walking roaming with camera on helmet
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள கவுரி நகரில், சொத்துத் தகராறு காரணமாகத் தொடர் அச்சுறுத்தல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, ஒரு நபர் தனது தலையில் பெரிய கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை அணிந்துகொண்டு தெருக்களில் சுற்றித் தெரிகிறார்.

சிசிடிவி கேமராவுடன் சுற்றித்திரியும் அந்த நபர், சொத்து தகராறு காரணமாக அண்டை வீட்டார் தன்னையும் குடும்பத்தினரையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த நபர்களால் தனது குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் அந்த நபர் கூறியதாவது, “பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் எங்கள் வீட்டைக் கைப்பற்ற விரும்புகிறார்கள். எனது வீட்டின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினேன். ஆனால் அந்த கேமராக்களை அண்டை வீட்டார் உடைத்துவிட்டனர்.

வேறு வழியின்றி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சுற்றித் திரிகிறேன். ஒருவேளை நான் உயிரிழந்தால் குற்றவாளிகளை கேமரா காட்டி கொடுக்கும். இந்த ஹெல்மெட் கேமரா தான் எனக்கு ‘கவசம்’. எனக்கோ அல்லது என் குடும்பத்திற்கோ ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் வீடியோ ஆதாரம் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த நபர் ஹெல்மட்டுடன் இந்தூர் நகரில் சுற்றித்திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "நாங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்ய முயன்று வருகிறோம். வழக்கு மறுபரிசீலனை செய்யப்படுகிறது, மேலும் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.