இந்தியா

'வெட்கமாக இல்லையா..' காங்கிரஸை சாடிய பிரீத்தி ஜிந்தா

நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜகவிற்கு கொடுத்து, தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்ததாக கேரள காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'வெட்கமாக இல்லையா..' காங்கிரஸை சாடிய பிரீத்தி ஜிந்தா
பிரீத்தி ஜிந்தா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த பிரீத்தி ஜிந்தா கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தொடர்ந்து, இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜீன் குட்இனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2021-ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட நடிகை பிரீத்தி ஜிந்தா தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.

நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜகவிற்கு கொடுத்து, தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்ததாக குற்றம்சாட்டிய கேரள காங்கிரஸ் கட்சிக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது,  நடிகை பிரீத்தி ஜிந்தா, நியூ இண்டியா கோ ஆப்ரேட்டிவ் வங்கி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 18 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். பின்னர் எந்தவித பாக்கியும் இல்லாமல் அந்த தொகையை திரும்ப செலுத்தி உள்ளார். 

இந்நிலையில், நடிகை பிரீத்தி ஜிந்தா, தனது சமூக ஊடகக் கணக்குகளை பாஜகவுக்கு கொடுத்து, தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்தார் என்று கேரள காங்கிரஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில்,  “என்னுடைய சமூக ஊடகக் கணக்குகளை நானேதான் இயக்குகிறேன். போலிச் செய்திகளை விளம்பரப்படுத்தியதற்காக உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். யாரும் எனக்காக  எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை.

ஒரு அரசியல் கட்சியோ அல்லது அவர்களின் பிரதிநிதியோ போலிச் செய்திகளை விளம்பரப்படுத்துவதும், என் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி மோசமான வதந்திகள் மற்றும் விளம்பரங்களில் ஈடுபடுவது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் வாங்கிய கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திவிட்டேன். இந்த பதிவு என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளுக்கு விளக்கமளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.