லைஃப்ஸ்டைல்

ஒரு சிகரெட் புகைக்கும் போது ஆயுளில் இவ்வளவு நாள் குறையுதா? பகீர் கிளப்பும் புதிய ரிப்போர்ட்!

புகைபிடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கு விளையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பழக்கத்தால் உங்கள் வாழ்நாளில் எவ்வளவு நாட்களை நீங்கள் இழக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மேற்கொண்ட ஆய்வின் பகீர் கிளப்பும் முடிவுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

ஒரு சிகரெட் புகைக்கும் போது ஆயுளில் இவ்வளவு நாள் குறையுதா? பகீர் கிளப்பும் புதிய ரிப்போர்ட்!
ஒரு சிகரெட் புகைக்கும் போது ஆயுளில் இவ்வளவு நாள் குறையுதா?

புகைப்பழக்கம், மது பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்படி தெரிந்தும் அந்த பழக்கத்தை கைவிட முடியாமல் தவிப்பவர்களே இங்கு அதிகம். இந்த பழக்கத்தால் வரும் ஆபத்துகளை பற்றி பல முறை மருத்துவர்கள் எச்சரித்தாலும், ’ஒரு சிகரெட் பிடிச்சா தான் Stress reliefஆ இருக்குப்பா’ என பிரச்சனையை விலை கொடுத்து வாங்குபவர்களே அதிகம். இப்படி புகைப்பிடிப்பவர்களால் தங்கள் உடல்நலன் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களும் சுவாசப்பிரச்சனை, இதய கோளாறு போன்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். 


இப்படி உயிர்கொல்லியாக இருக்கும் இந்த சிகரெட் பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்கு தெரியும், ஆனால் அது எவ்வளவு தீங்கை விளைவிக்கும் என தெரியுமா? அது குறித்தான ஆய்வை லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மேற்கொண்டது. அந்த ஆய்வில் ஒரு சிகரெட் பிடிப்பதால் ஒரு ஆண் தன்னுடைய வாழ்நாளில் இருந்து சுமார் 17 நிமிடங்களை இழப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், ஒரு சிகரெட் பிடிப்பதால் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் இருந்து 22 நிமிடங்கள் வரை இழப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது, 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டால் ஒரு நபரின் வாழ்க்கையில் இருந்து கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் குறைகிறது எனவும் இதே, ஒரு நபர் 1000 சிகரெட்டுகள் வரை புகைத்தால் அவருடைய வாழ்நாளில் 13 நாட்கள் குறைகிறது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர், அதிகமாக புகைப்பிடிக்கும் ஒரு நபர் இப்போது புகைப்பழக்கத்தை நிறுத்தினால் கூட, புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சிறிது சரி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், புகைப்பழக்கம் உடையவர்கள் முழுமையாக 1 வருடம் வரை அந்த பழக்கத்தை நிறுத்தினால், உடலில் நல்ல மாற்றங்களை காணலாம் எனவும், திடீர் இதய செயலிழப்பு, மூச்சுத்திணறல், நிமோனியா போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குறையலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், புகைப்பழக்கம் அதிகம் இல்லாதவர்கள், அதை நிறுத்தினால், இதய ஆரோக்கியம் இயல்பு நிலைக்கு வர 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதிக எண்ணிக்கையில் சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடும்போது, அவர்களுடைய இதய ஆரோக்கியம் முழுவதும் குணமாக 25 ஆண்டுகள் வரை ஆகும் என ஆய்வுகள் கூறுகிறது.

ஆண்டு முழுவதும் 80 லட்சம் மக்கள் சிகரெட்டால் பலியாகின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 2021ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 13 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் சிகரெட் பழக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இது உலகளாவிய எண்ணிக்கையில் 17 புள்ளி 8 சதவீதம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. இப்படி உயிர்கொல்லியாக இருக்கும் புகைப்பழக்கத்தை இன்றே கைவிட்டால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் அது நன்மையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.