லைஃப்ஸ்டைல்

பனை சார்ந்து அட்டகாசமான 3 உணவு.. பக்குவமா செய்வது எப்படி?

பாரம்பரியத்தை பறை சாற்றும் சில பனை உணவுகள் தயாரிப்பு முறை குறித்த தகவல்களை குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் வாசகர்களுக்காக பகிர்ந்துள்ளார் தேனம்மை லெக்‌ஷமணன். இந்த பகுதியில் அஞ்சுமாவு கொழுக்கட்டை, பனங்கிழங்குக் காரப்புட்டு,கருப்பட்டி- எள் பூரணக் கொழுக்கட்டை செய்வது எப்படி என காண்போம்.

பனை சார்ந்து அட்டகாசமான 3 உணவு.. பக்குவமா செய்வது எப்படி?
Recipe details for 3 delicious palm based food items in Tamil
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் சிறப்பிடம் பெற்றவை, பனைசார்ந்த பொருட்கள். வேரிலிருந்து மடல்வரை பயன் தருவதால், பனைமரத்தை ‘கற்பகத்தரு’ என்றே கூறலாம். பனையிலிருந்து பெறப்படும் பனம்பழம், பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கல்கண்டு ஆகியவைப் பார்வைத் திறன் மேம்பாடு, ரத்த விருத்தி, குரல் வளத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.

வயிற்றுப்புண், வயிற்றெரிச்சல் ஆகியவற்றை நீக்குகின்றன. எலும்புகள் மட்டுமல்ல; பெண்களின் கருப்பையையும் வலுவாக்கும் தன்மைக் கொண்டுள்ளன. எனவே, பனை உணவுகளை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரமிடுங்கள் என தேனம்மை லெக்‌ஷமணன் இந்த வார சிநேகிதி இதழில் தெரிவித்துள்ளார். சில பனை உணவுகள் தயாரிப்பு முறை குறித்த தகவல்கள் பின்வருமாறு-

1. அஞ்சுமாவு கொழுக்கட்டை:

தேவையானவை:- கருப்பட்டி, வெல்லம் & 150 கிராம், பச்சரிசி மாவு, புழுங்கலரிசி மாவு, சிவப்பரிசி மாவு, கவுனரிசி மாவு, கோதுமை மாவு & தலா கால் கப், தேங்காய்த்துருவல் & அரை கப், ஏலக்காய்த் தூள், உப்பு & தலா 1 சிட்டிகை, வெந்நீர் & ஒண்ணே கால் கப், வறுத்த எஷீமீ & அரை டீஸ்பூன்.

செய்முறை:- மாவு வகைகளைத் தனித்தனியாக வெறும் வாணலியில், மணல்போல வறுத்து, ஒரு பவுலில் கொட்டவும். கருப்பட்டி, வெல்லம் இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் போட்டு, இளம்பாகு வைத்து, கரைத்து, வடிகட்டவும். தேங்காய்த்துருவல், உப்பு, ஏலக்காய்த்தூள், எள் சேர்த்து மாவில் நன்றாகக் கலந்து, வெல்லம்&கருப்பட்டிப் பாகு ஊற்றி, நன்றாகக் கிளறவும். பின்னர், மாவைப் பிசைந்து, கொழுக் கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைத்து, எடுக்கவும்.

2. பனங்கிழங்குக் காரப்புட்டு

தேவையானவை:- பனங்கிழங்கு- 8, பூண்டு - 4 பற்கள், பச்சை மிளகாய்- 2, சீரகம்- 1/2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல்-2 டீஸ்பூன், கறிவேப்பிலை-ஓர் இணுக்கு, மஞ்சள் தூள்- 1 சிட்டிகை, உப்பு-2 டீஸ்பூன்.

செய்முறை:- பனங்கிழங்கின் மேற்தோலை உரித்து, குக்கரில் போடவும். பின்னர், உப்பு, மஞ்சள் தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 8 விசில்கள் வரும்வரை வேகவிடவும். நன்றாக ஆறியதும், நடு நரம்பை எடுத்துவிட்டு, தோலுரித்து, துண்டுகளாக்கி, வெயிலில் சிறிது நேரம் காய வைக்கவும். பச்சைமிளகாய், உரித்த பூண்டு, சீரகம், உப்பு, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும். இதில், காய்ந்த பனங்கிழங்கைச் சேர்த்து, அரை நிமிடம் ஓட்டியெடுத்து, தேங்காய்த்துருவல் கலந்து, பரிமாறவும்.

3. கருப்பட்டி- எள் பூரணக் கொழுக்கட்டை

தேவையானவை:-கருப்பட்டி, வெல்லம்- தலா கால் கப், பச்சரிசி - 2 கப், கருப்பு எள்- 1 கப், ஏலக்காய்த்தூள், உப்பு- தலா 1 சிட்டிகை, நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்.

மேல்மாவு செய்முறை:-பச்சரிசியைக் களைந்து, 2 மணிநேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து, நைஸாகவும் சிறிது தளரவும் அரைக்கவும். பானில் நல்லெண்ணெயைக் காயவைத்து, அரைத்த மாவைக் கொட்டி, ஒட்டாத பதம் வரும்வரை சுருளக் கிளறி, இறக்கி, ஆறவிடவும்.

பூரணம் செய்முறை:-எள்ளைக் களைந்து, கல் நீக்கி, உலர்த்தவும். பின்னர், வெறும் வாணலியில் பொரித்து, கருப்பட்டி மற்றும் வெல்லத்தைப் பொடித்து போடவும். அடுத்ததாக, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்து வைக்கவும். கொழுக்கட்டை செய்முறை: மேல்மாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து, ‘சொப்பு’ செய்து, பூரண உருண்டையை வைத்து மூடி, இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடங்கள் வேகவைத்து, எடுக்கவும்.