சென்னை: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் தொடங்கிய இத்திரைப்படம் கோட்-ஆக ரசிகர்களிடம் பிரபலமானது. படக்குழுவும் கோட் என்ற டைட்டிலையே படத்தின் ப்ரோமோஷனுக்காக பயன்படுத்தியது. முன்னதாக இப்படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானது முதலே, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பது ஆங்கில டைட்டில் என விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், பான் இந்தியா அளவில் படத்துக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதால் கோட் என்ற ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அதேபோல், பீஸ்ட், கோட் என வரிசையாக விஜய் நடிக்கும் படங்களின் டைட்டில் ஆங்கிலத்தில் இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் டைட்டிலை சுத்த தமிழில் மொழி பெயர்த்திருந்தார் கவிஞர் மகுடேஸ்வரன். அதில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பது, ’எஞ்ஞான்றும் மாப்பெரிது’ என குறிப்பிட்டு இருந்தார்.
இது ஒருபக்கம் இருக்க, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் டைட்டிலில் சனாதனம் இருப்பதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள விசிக எம்பி ரவிக்குமார், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)” என பதிவிட்டுள்ளார்.
விசிக எம்பி ரவிக்குமாரின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ள விஜய், தனது கட்சியின் பெயரை அறிவித்து, கொடியையும் அறிமுகம் செய்துவிட்டார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர், 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஆனால், விஜய்யின் அரசியல் கொள்கை, சித்தாந்தம் குறித்து இதுவரை தெளிவான விளக்கம் இல்லை. இதனால் விஜய்யின் தவெக பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் படம் எப்படி இருக்கு?
ஏற்கனவே இந்த லிஸ்ட்டில் மேலும் சில தமிழக அரசியல் கட்சிகளின் பெயர்கள் அடிபடுகின்றன. இப்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்துள்ளது. இந்த பரபரப்புகளுக்கு நடுவே தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பது சனாதனக் கருத்து என எம்பி ரவிக்குமார் கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.